/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துவக்கப்படாத இயற்கை தேயிலை தொழிற்சாலை பணி பழங்குடியினர் ஏமாற்றம்! ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியும் பயன் ஏதும் இல்லை
/
துவக்கப்படாத இயற்கை தேயிலை தொழிற்சாலை பணி பழங்குடியினர் ஏமாற்றம்! ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியும் பயன் ஏதும் இல்லை
துவக்கப்படாத இயற்கை தேயிலை தொழிற்சாலை பணி பழங்குடியினர் ஏமாற்றம்! ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியும் பயன் ஏதும் இல்லை
துவக்கப்படாத இயற்கை தேயிலை தொழிற்சாலை பணி பழங்குடியினர் ஏமாற்றம்! ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியும் பயன் ஏதும் இல்லை
ADDED : ஆக 31, 2024 02:22 AM

கோத்தகிரி;கோத்திகிரியில் பழங்குடியினருக்கான, இயற்கை தேயிலை தொழிற்சாலை துவக்கப்படாமல் உள்ளதால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோத்தகிரி வட்டம், கொணவக்கரை, ஜக்கனாரை மற்றும் குஞ்சப்பனை ஊராட்சிகளுக்கு உட்பட்ட, கோழித்தொறை பழங்குடியினர் கிராமத்தில், மாநில அரசு நிதி உதவியுடன், இயற்கை பசுந்தேயிலை தொழிற்சாலை நிறுவ, 2016-17ம் ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, பழங்குடியினர் மேம்பாட்டு எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில் தேயிலை தொழிற்சாலை, மின் இணைப்பு, இயந்திரம் பொருத்துவது, போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களுக்கு, 66.46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
மேலும், பசுந்தேயிலை தயாரிப்பு, பேக்கிங், தேயிலை வாரியத்தில் சான்றிதழ் பெறுவது, விற்பனை செய்வது மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது, போன்ற செலவினங்களுக்கு, 13.54 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு, 8 ஆண்டுகள் நிறைவடைந்தும், இயற்கை தேயிலை தொழிற்சாலை பணி துவக்கப்படவில்லை.
பழங்குடியின மக்கள் ஏமாற்றம்
இந்நிலையில், கோத்தகிரியில் மூன்று கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட, செம்மனாரை, தாளமொக்கை, கோழித்தொறை, அட்டடி, புதுார், கோழிக்கரை, குஞ்சப்பனை, சுண்டப்பட்டி, மந்தரை, அரையூர், பனகுடி சோலை, வெள்ளரிக்கோம்பை, நட்டக்கல், கடசோலை மற்றும் மெட்டுக்கல் ஆகிய பழங்குடியின கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான, இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியின மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
40 ஆண்டுகளாக வாழ்வாதார பயிர்கள்
இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக, மலைத்தோட்ட பயிர்களான தேயிலை, காபி, மிளகு, காய்கறி, பலா கொய்யா மற்றும் இலவம் பஞ்சு ஆகியவை உள்ளன. இது போன்ற மலை தோட்ட பயிர்களை கடந்த, 40 ஆண்டுகளாக பயிர் செய்து வருகின்றனர்.
மக்களுக்கு, தேயிலை வாரியம், உபாசி மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகள் பயிர் செய்ய உதவியுள்ளன. ஆனால், அரசால் அனுமதிக்கப்பட்ட, இயற்கை தேயிலை தொழிற்சாலை பணி மட்டும் இன்னும் துவக்கப்படாமல் உள்ளது.
நீலகிரி பழங்குடியினர் தேயிலை உற்பத்தியாளர் சங்க செயலாளர் சண்முகம் கூறுகையில், ''கோழித்தொறை பகுதியில், 2016-17ம் ஆண்டில், இயற்கை தேயிலை தொழிற்சாலை இயந்திர அலகு அமைக்க, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆரம்பக்கட்ட பணி மட்டும் நடந்துள்ளது.
அதற்கான செலவினத்தை தவிர, ஊட்டி பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில், 61.97 லட்சம் ரூபாய் நிதி நிலுவையில் உள்ளது. அந்த நிதியில் இருந்து தேயிலை தொழிற்சாலை அமைக்கும் பணிகளை துவங்க, சென்னை பழங்குடியினர் நல இயக்குனர் மற்றும் முதன்மை செயலாளர் அலுவலகம் ஆவண செய்ய வேண்டும். இதனால், பழங்குடியினர் வாழ்வு மேம்படும்,''என்றார்.