/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திறக்கப்படாத அங்கன்வாடி மையங்கள் ஒன்றிய கூட்டத்தில் சரமாரி புகார்
/
திறக்கப்படாத அங்கன்வாடி மையங்கள் ஒன்றிய கூட்டத்தில் சரமாரி புகார்
திறக்கப்படாத அங்கன்வாடி மையங்கள் ஒன்றிய கூட்டத்தில் சரமாரி புகார்
திறக்கப்படாத அங்கன்வாடி மையங்கள் ஒன்றிய கூட்டத்தில் சரமாரி புகார்
ADDED : பிப் 07, 2024 11:13 PM

அன்னூர்: 'பல அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படாததால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்,' என ஒன்றிய குழு கூட்டத்தில் சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அன்னூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கரி, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 25 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
கவுன்சிலர் செல்வராஜ் பேசுகையில், காட்டம்பட்டி, அண்ணா நகரில், மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு கூட்டுறவு துறையினர் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். அதற்கு அனுமதி பெற்று தர வேண்டும்'' என்றார்.
கவுன்சிலர் பிரபு பேசுகையில், வளர்ச்சி பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைவில் முடிக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
சேர்மன் அம்பாள் பழனிசாமி பேசுகையில்,மரக்கன்றுகள் நடுவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அதிகாரிகள் களப்பணிக்கு செல்வதில்லை என புகார் எழுந்துள்ளது. வாக்கனாங்கொம்பு, ஆல பாளையம் உள்பட பல ஊர்களில் மூடப்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து செயல்படுத்தக் கோரி பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் வருகிறது, என்றார்.
கவுன்சிலர் ஜெயபால் பேசுகையில், இரண்டு ஆண்டுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டிய 708 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகள் இன்னும் முடியாமல் இழுபறியாக இருக்கிறது. கரியாம்பாளையம், காரேகுண்டம்பாளையம் பகுதியில் இந்த திட்டத்தில் இதுவரை குடிநீர் வழங்கவில்லை, பழைய திட்டத்திலும் தண்ணீர் வருவதில்லை. ரேஷன் கடைகளில் தேவையில்லாத மற்ற பொருட்களையும் வாங்கும்படி வற்புறுத்துகின்றனர், என்றார்.
குடிநீர் வடிகால் வாரிய இளநிலை பொறியாளர் ராஜப்பன் பதிலளிக்கையில், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளன. சில இடங்களில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும், என்றார்.
கவுன்சிலர் லோகநாயகி பேசுகையில், பல இடங்களில் மர்ம காய்ச்சல் பரவுகிறது, என்றார்.
கவுன்சிலர் சுமதி பேசுகையில், காலையில் கிராமங்களுக்கு இயங்கும் டவுன் பஸ்கள் மதியம் மற்றும் மாலையில் மாயமாகி விடுகின்றன, என்றார்.
ஒன்றிய கூட்டத்திற்கு கூட்டுறவு, வருவாய்த்துறை மற்றும் மின்வாரியத்தில் இருந்து அதிகாரிகள் பங்கேற்பதில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

