/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில்... மின் உற்பத்தி சரிவு!கோடையை சமாளிக்க என்ன செய்ய போகிறது மின் வாரியம்?
/
மலை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில்... மின் உற்பத்தி சரிவு!கோடையை சமாளிக்க என்ன செய்ய போகிறது மின் வாரியம்?
மலை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில்... மின் உற்பத்தி சரிவு!கோடையை சமாளிக்க என்ன செய்ய போகிறது மின் வாரியம்?
மலை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில்... மின் உற்பத்தி சரிவு!கோடையை சமாளிக்க என்ன செய்ய போகிறது மின் வாரியம்?
ADDED : மார் 21, 2024 10:51 AM

ஊட்டி: நீலகிரி மின் நிலையங்களில் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள கடும் சரிவால் மின்வாரியம் திணறி வருகிறது.
நீலகிரியில், 13 அணைகள்; 30 தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. அதில், 'குந்தா வட்டத்தில், 6 மின் நிலையம்; பைக்காரா வட்டத்தில், 6 மின் நிலையம்,' என, 12 மின் நிலையங்கள் மூலம் நாள்தோறும், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டில் எதிர்பார்த்த அளவு பருவ மழை பெய்யவில்லை. எனினும், அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு எடுக்கப்பட்டது.
மழை இல்லையேல் சிக்கல்
இதனால், தற்போது பெரும்பாலான அணைகளில், 30 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது. வரும் நாட்களில் மழை பொய்த்தால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மின் பயன்பாட்டில் சிக்கல் உருவாகும்.
தற்போது, இருப்பில் உள்ள தண்ணீர் மூலம், குந்தா, கெத்தை, மாயார், முக்கூர்த்தி அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் சேமித்து தினசரி உற்பத்தியை மின் வாரியம் சமாளித்து வருகிறது. கடந்த, 2022ம் ஆண்டில் உற்பத்தி சராசரியாக, 600 மெகாவாட்டாக இருந்தது.
கடந்தாண்டில், 200 மெகாவாட்டாக இருந்தது. மழை பொய்த்த காரணத்தால், 400 மெகாவாட் அளவு மின் உற்பத்தி குறைந்ததால், தற்போது சமவெளி பகுதிக்கு மின்சாரம் வினியோகிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு துவக்கத்திலேயே சராசரியாக, 150 முதல் 200 மெகாவாட்டாக உற்பத்தி குறைந்துள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கடந்தாண்டில் பருவமழை பொய்ததால், அணைகளில் தண்ணீர் இருப்பு அடியோடு குறைந்தது. தற்போதைய சூழ்நிலையில் கோடை மழை பெய்தால் மட்டுமே பெரும்பாலான அணைகளில் ஓரளவு தண்ணீரை சேமிக்க முடியும். தற்போதுள்ள தண்ணீர் இருப்பு மூலம், 20 நாட்கள் மின்உற்பத்தி மேற்கொள்ள முடியும். இதனால், மழையை எதிர்பார்த்து காத்துள்ளோம். இதுவரை இதுபோன்ற சூழ்நிலை வந்ததில்லை,' என்றனர்.

