/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அப்பர்பவானி கூட்டுக் குடிநீர் திட்டம் அவசியம்! தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி
/
அப்பர்பவானி கூட்டுக் குடிநீர் திட்டம் அவசியம்! தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி
அப்பர்பவானி கூட்டுக் குடிநீர் திட்டம் அவசியம்! தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி
அப்பர்பவானி கூட்டுக் குடிநீர் திட்டம் அவசியம்! தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி
ADDED : பிப் 14, 2024 09:38 PM
மஞ்சூர்: 'குந்தா பகுதிகளில் தொடரும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அப்பர்பவானி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மஞ்சூர் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகள் மற்றும் குந்தா, முள்ளிகூர், பாலகொலா ஊராட்சிகளில், 100கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மஞ்சூருக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
பராமரிப்பில் தொய்வு
இதற்கு குந்தா பகுதியில் உள்ள நீர் தேக்கங்கள் முறையாக பராமரிக்காமல் இருப்பது; அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய குடிநீராதாரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் முக்கிய காரணங்களாகும்.
இதை தவிர, இங்குள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களில் சேறு, சகதிகள் நிறைந்துள்ளதால் குறைந்த அளவிலான தண்ணீரை மட்டுமே சேமிக்க முடிகிறது. இதனால், கோடை மற்றும் வறட்சி காலங்களில் கிராமங்கள் தோறும் பற்றாக்குறை ஏற்படுவதுடன், குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
குடங்களுடன் அலையும் மக்கள்
இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் காலி குடங்களுடன் தொலை துாரங்களுக்கு குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகள் உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள நீர் தேக்கங்களை துார்வாரி அதில் உள்ள சேறு, சகதிகளை அகற்றி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது மட்டுமின்றி, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அப்பர்பவானி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும்.
உள்ளூர் மக்கள் கூறுைகயில், 'மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின்நிலையங்களில் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாகவும், மாவட்டத்தில் பெரிய அணையாகவும் அப்பர்பவானி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து, குழாய் மூலம் நீரை கொண்டு வந்து கிண்ணக்கொரை, மேல்குந்தா, மஞ்சூர், பிக்கட்டி, எடக்காடு, உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் சேமிக்க வேண்டும். கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, இந்த தொட்டியில் இருந்து கிராமங்களுக்கு தண்ணீரை வினியோகிக்க வேண்டும்,' என்றனர்.

