/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் வாகன சோதனை 'பிளாஸ்டிக்' பறிமுதல்
/
ஊட்டியில் வாகன சோதனை 'பிளாஸ்டிக்' பறிமுதல்
ADDED : பிப் 03, 2025 06:56 AM

ஊட்டி : ஊட்டியில் வருவாய் துறையினர் மேற்கொண்ட திடீர் வாகன சோதனையில், 12 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட், 2019-ம் ஆண்டு மே மாதம் வெளியிட்ட தீர்ப்பில், 'நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் பயன்படுத்த கூடாது,' என, தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நீலகிரியில் தொடர் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து அரசு மற்றும் தனியார் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னர் அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,
ஆனால், சமீப காலமாக வெளி மாநிலம் , வெளி மாவட்டத்திலிருந்து வரும் அரசு பஸ், சுற்றுலா வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் தலைமையில், தாசில்தார் சங்கர்கணேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினர் லவ்டேல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த அரசு விரைவு பஸ், சுற்றுலா வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், 12 கிலோ கொண்டு வந்தது கண்டறியப்பட்டு, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.