/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை சீரமைக்காததால் வாகனங்கள் சென்றுவர சிக்கல்
/
சாலை சீரமைக்காததால் வாகனங்கள் சென்றுவர சிக்கல்
ADDED : ஏப் 14, 2025 09:48 PM

கோத்தகிரி; கோத்தகிரி கோடநாடு சாலையில், கேர்பெட்டா -புதுார் இடையே தண்ணீர் பள்ளம் பகுதியில், சாலை சீரமைக்காததால் வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரியில் இருந்து, இச்சாலையை கடந்து, 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேயிலை தொழிற்சாலை லாரிகள், பள்ளி வாகனங்கள் உட்பட, தனியார் வாகனங்களின் இயக்கம் இச்சாலையில் அதிகமாக உள்ளது.
தண்ணீர் பள்ளம் பகுதியில், சாலையில் பதிக்கப்பட்ட 'இன்டர் லாக்' கற்கள் தற்போது பெயர்ந்துள்ளது. தவிர, சாலை விரிவாக்கப்பட்ட பகுதியில், 'கான்ரீட்' போடப்படாமல் உள்ளது. மேலும், இப்பகுதியில் வாகனங்கள் கழுவுவதால், தண்ணீர் சாலையின் மேல் ஓடி, சேதம் அடைந்துள்ளது.
இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோடை சீசன் நெருங்கி வரும் நிலையில், கோடநாடு காட்சி முனைக்கு, சுற்றுலா வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. எனவே, நெடுஞ்சாலை துறையினர் சாலையை விரைந்து சீரமைக்க, நடவடிக்கை எடுப்பது அவசியம்.