/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓடி, ஓடி உழைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்கள்; பூமிக்கு பாரமாக நிற்பதாலும் சங்கடங்கள்
/
ஓடி, ஓடி உழைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்கள்; பூமிக்கு பாரமாக நிற்பதாலும் சங்கடங்கள்
ஓடி, ஓடி உழைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்கள்; பூமிக்கு பாரமாக நிற்பதாலும் சங்கடங்கள்
ஓடி, ஓடி உழைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்கள்; பூமிக்கு பாரமாக நிற்பதாலும் சங்கடங்கள்
ADDED : ஜூன் 11, 2025 09:44 PM

நீலகிரி மாவட்டம், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. 'ஊட்டி டவுன், ஊட்டி ரூரல், குன்னுார், கூடலுார், தேவாலா,' ஆகிய போலீஸ் சப்--டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், 'கக்கநல்லா, நாடுகாணி, தாளூர், குச்சப்பனை, கெத்தை,' என, 11 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி சர்வதேச சுற்றுலா தலம் என்பதால் ஆண்டுக்கு, 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தமிழகத்தில் போதை வஸ்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா, கேரளாவிலிருந்து கஞ்சா, போதை பொருட்கள், போலீஸ் சோதனையும் மீறி காய்கறி லாரி, ஆம்புலன்ஸ் வாகனம், சில நேரங்களில் அரசு பஸ், சுற்றுலா வாகனங்களிலும், ஊட்டிக்கு கடத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
880 வாகனங்கள் பறிமுதல்
இந்நிலையில், கடந்த மூன்றாண்டு காலத்தில், 'கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருட்கள் கடத்தல்,' என, ஊட்டி டிவிஷனில், 285 வாகனம்; கூடலுார், 200, தேவாலா, 115 வாகனம்; ஊட்டி ரூரல், 80 வாகனம்; குன்னுார், 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் நடந்து வருகிறது. இவைகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் உட்பட அதன் அருகே உள்ள காலியிடங்களில் நிறுத்தப்பட்டு, புதர் சூழ்ந்து காணப்படுகின்றன.
இதை தவிர, மாவட்டத்தில் உள்ள, 6 தாலுக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் பணிமனைகள் உட்பட தனி நபர்களின் வாகனங்களும் சாலையோரம், நிறுத்தப்பட்டு துருபிடித்து விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறி உள்ளன.
இவற்றால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சில இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இடையூறாக உள்ள பகுதிகளில் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏ.டி.எஸ்.பி.,மணிகண்டன் கூறுகையில், ''கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வழக்கு நடந்து வருவதால், அந்தந்த டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டில் மட்டும், 166 சாலை விபத்து வழக்கு, குடி போதையில் அபாயகரமாக வாகனம் ஓட்டியதாக, 1,345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில், பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டுள்ளன. இதை தவிர, சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
போக்குவரத்துக்கும் பாதிப்பு
கூடலுார் நந்தட்டி பகுதியில், கோழிக்கோடு சாலை, மைசூரு தேசிய நெடுஞ்சாலை தொரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் வாகன பணிமனைகள் உள்ளிட்ட வாகனம் பழுது நீக்கம் தொடர்பான பணி மனைகள் செயல்பட்டு வருகிறது. அதில், சிலர், வாகனங்களை சாலையில் நிறுத்தி, பழுது பார்க்கும் பணியை மேற்கொள்வதால், வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.
மேலும், இப்பகுதி சாலையோரங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி செல்லும் இடமாக மாற்றி உள்ளனர். அவ்வாறு நிறுத்தி செல்லப்பட்டுள்ள பழைய வாகனங்கள் சுற்றிலும், செடிகள் வளர்ந்துள்ளது. வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதுடன், மக்கள் சாலையோரம் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமூக விரோதிகளின் கூடாரம்
குன்னுாரில் நிறுத்தப்பட்டுள்ள பல பழைய வாகனங்களில் சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது. இது போன்ற வாகனங்களை போதை பழக்கத்திற்கு பயன்படுத்துவது, போதை பொருட்களை பதுக்குவது குறித்து, நகராட்சி கூட்டத்தில் பகிரங்கமாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அதில், குன்னுார் டி.டி.கே., சாலையில், நகராட்சியின் பழமை வாய்ந்த வாகனங்கள் துருபிடித்து செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது.
அதே சாலையில் பணிமனைகளின் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், போலீசாரால் பிடிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மொத்தமாக 'ஆப்பிள் பி' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை சாலை, டென்ட் ஹில், கான்வென்ட் ரோடு, மாடல் ஹவுஸ் உட்பட பல இடங்களிலும் வாகனங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இவற்றை அகற்ற குன்னுார் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல முறை வலியுறுத்தினர். 'வாகன உரிமையாளர்களை அழைத்து, போலீசாரின் ஒத்துழைப்புடன், பழைய வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இதை தவிர, குன்னுார் நகராட்சியில், உழவர் சந்தை பகுதியில் புதிய கடைகள் அமைப்பதற்காக பணி நடந்த போது, அங்கு நிறுத்தப்பட்ட நகராட்சி பழைய வாகனங்கள் ஓட்டுப்பட்டறை குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக, 3 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டது. அந்த வாகனங்களை இரும்பு கடை களுக்கு ஏலம் விடப்பட்டு இருந்தால், மக்களின் வரி பணமானது மிச்சமாக வாய்பிருந்திருக்கும். இதேபோன்று, கோத்தகிரி, பந்தலுார் உட்பட பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்களை மாவட்ட நிவர்வாகம் அகற்றி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நிருபர் குழு--