/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில்களில் வித்யாரம்பம் விழா கோலாகலம்
/
கோவில்களில் வித்யாரம்பம் விழா கோலாகலம்
ADDED : அக் 02, 2025 09:37 PM

--நிருபர் குழு--
நீலகிரி மாவட்டத்தில் சுற்று வட்டார கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
விஜயதசமி முன்னிட்டு, பந்தலுார் பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் மேலாளர் சந்தியா தலைமை வகித்தார். கோவில் மேல் சாந்தி சுதீஷ் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அரிசியில் அகரம் எழுதி, நாவில் அரிச்சுவடி எழுதியதுடன், பிரசாதம் வழங்கி எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பங்கேற்ற குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டு புத்தகம், பேனா பரிசாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- * தேவாலா வேட்டைக்கொருமகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு கோவில் கமிட்டி தலைவர் ஹரிஹரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கோவில் அர்ச்சகர் சுப்ரமணியம் குழந்தைகளுக்கு அகரம் எழுதி எழுத்தறிவித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
* அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா பள்ளியில், நடந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அன்பரசி தனராஜ் வரவேற்றார். பள்ளி தாளாளர் மனோஜ் குமார் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சத்தியபாமா, பள்ளி செய்தி தொடர்பாளர் ஆசிரியர் கங்காதரன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதில் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் குமாரவேலு, பிரபு ஆகியோர் எழுத்தறிவித்தனர். பங்கேற்ற குழந்தைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், பிரசாதம் வழங்கப்பட்டது. துணை முதல்வர் ரேணுகா நன்றி கூறினார்.
* கூடலுார் விநாயகர் கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், கோவில் குருக்கள் கார்த்திகேயன், குழந்தைகளுக்கு அரிசியில் அகரம் எழுதி, வேல்முனையில் குழந்தைகளின் நாவில் 'ஓம்' என, எழுதி கற்றலை துவக்கி வைத்தார்.
புத்துார் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், கோவில் மேல் சாந்தி விவேக் சுப்ரமணி குழந்தைகளுக்கு அரிச்சுவடியை துவக்கி வைத்தார். நம்பாலாகோட்டை வேட்டைக்கொருமகன் கோவில், தேவர்சோலை சிவசங்கரன் கோவில், கள்ளிங்கரை சிவன் கோவில், ஸ்ரீமதுரை மகாவிஷ்ணு கோவில், முனீஸ்வரன் கோவில் மற்றும் கிராம கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
* ஊட்டி ஐயப்பன் கோவிலில், ஐயப்பன் பஜனை சபா சார்பில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு, கோவிந்தன் நம்பூதிரி தலைமை வகித்தார். குழந்தைகளுக்கு அரிசியில் அகரம் எழுதி கற்றலை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பெற்றோர், பஜனை சபா நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* குன்னுார், அருவங்காடு, வெலிங்டன் பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர், குழந்தைகள் பங்கேற்று அகரம் எழுதி கற்றலை துவக்கினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.