/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விளாமரத்தூர் குடிநீர் திட்டம்; விரைவில் துவக்கம் 12 லட்சம் லிட்டர் கூடுதலாக கிடைக்கும்
/
விளாமரத்தூர் குடிநீர் திட்டம்; விரைவில் துவக்கம் 12 லட்சம் லிட்டர் கூடுதலாக கிடைக்கும்
விளாமரத்தூர் குடிநீர் திட்டம்; விரைவில் துவக்கம் 12 லட்சம் லிட்டர் கூடுதலாக கிடைக்கும்
விளாமரத்தூர் குடிநீர் திட்டம்; விரைவில் துவக்கம் 12 லட்சம் லிட்டர் கூடுதலாக கிடைக்கும்
ADDED : பிப் 14, 2024 11:40 PM

மேட்டுப்பாளையம், - மேட்டுப்பாளையத்தில் விளாமரத்தூர் குடிநீர் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது, இத்திட்டத்தின் வாயிலாக கூடுதலாக 12 லட்சம் லிட்டர் குடிநீர் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு கிடைக்க உள்ளது, என நகராட்சி தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மேட்டுப்பாளையம் நகரத்திற்கு, மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றிலிருந்து தினசரி 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, சாமன்னா நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்யப்படுகிறது.
இங்குள்ள வார்டுகளுக்கு மூன்றில் இருந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றன. சில இடங்களில் 7 நாட்கள் வரை விநியோகம் செய்யப்படுவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் நிறைவடையாத நிலையில், நகரிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதால், ஆற்றில் இருந்து எடுக்கப்படும் மாசடைந்த குடிநீரை குடிப்பதாக, மக்கள் கருதுகின்றனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, நெல்லித்துறை ஊராட்சி விளாமரத்தூரில் பவானி ஆற்றிலிருந்து, தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து, குடிநீராக விநியோகம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் நகரத்திற்கு விளாமரத்தூர் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
மேலும் இத்திட்டத்திற்கு ரூ.22.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளன. இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் கூறுகையில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு பவானி ஆற்றில் இருந்து மிகவும் தூய்மையான தண்ணீர் விளாமரத்தூரில் இருந்து எடுக்கப்பட உள்ளது.
இங்கிருந்து தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும். இந்த தண்ணீர் சாமன்னா நீரேற்று நிலையம் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு நகராட்சியின் 33 வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்படும்.
திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் இந்த வாரம் இறுதிக்குள் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகும், என்றார்.--

