/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அணிக்கொரை கிராமத்தில் 'ஊரை தேடி காவலர்' திட்டம்
/
அணிக்கொரை கிராமத்தில் 'ஊரை தேடி காவலர்' திட்டம்
ADDED : ஜன 14, 2025 08:21 PM

ஊட்டி:
ஊட்டி அணிக்கொரை கிராமத்தில் காவல்துறை சார்பில், 'ஊரை தேடி காவலர்' என்ற திட்டம் துவக்கப்பட்டது.
மாவட்டத்திலுள்ள அனைத்து காவலர்களுக்கும், ஒன்று அல்லது இரண்டு கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு, வாரம் ஒரு நாள் சென்று, கிராம மக்களை நேரில் சந்தித்து தகவல்களை சேகரிக்க வேண்டும்.
அந்த தகவல்களை காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் பதிவு செய்து, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அந்த காவலர், அந்த கிராம மக்களின் பொதுவான தேவைகளை தெரிந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், கிராமங்களில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், 'கிராம மக்களிடமிருந்து நேரடியாக தகவல்களை பெறுவது; குற்றங்களை தடுப்பது; பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது; மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை தளர்ப்பது; போதை பொருள் மற்றும் நக்சல் எதிர்ப்பு,' போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
இதன் மூலம், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், அவ்வப்போது கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் முதன் முதலாக, ஊட்டி அருகே உள்ள அணிக்கொரை கிராமத்தில் துவக்கப்பட்டது. நீலகிரி எஸ்.பி., நிஷா முன்னிலையில், தகவல் பலகை திறக்கப்பட்டு, ஊர் முக்கியஸ்தர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.