/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊரை தேடி காவலர் திட்டம் பழங்குடி கிராமத்தில் துவக்கம்
/
ஊரை தேடி காவலர் திட்டம் பழங்குடி கிராமத்தில் துவக்கம்
ஊரை தேடி காவலர் திட்டம் பழங்குடி கிராமத்தில் துவக்கம்
ஊரை தேடி காவலர் திட்டம் பழங்குடி கிராமத்தில் துவக்கம்
ADDED : ஜன 28, 2025 07:23 AM
ஊட்டி :  நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், 'ஊரை தேடி காவலர்' என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும், 'ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு,' என, கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அந்த கிராமங்களுக்கு வாரத்தில் ஒருமுறை சென்று அந்த கிராம மக்களை சந்தித்து தகவல்களை சேகரிக்க வேண்டும். அந்த தகவல்களை போலீஸ் ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் பதிவு செய்து, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.  கிராமங்களில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டத்தின் நோக்கம்
கிராம மக்களிடமிருந்து நேரடியாக தகவல்களை பெறுதல்;  குற்றங்களை தடுத்தல்; பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல்; மாணவ, மாணவிகளின்  பள்ளி இடை நிற்றலை தடுத்தல்; போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,' என்பன, திட்டத்தின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் கிராமங்கள் தோறும் பொறுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுமந்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட முத்தநாடு மந்து தோடர் பழங்குடி கிராமத்தில், 'ஊரைத் தேடி காவலர்'  திட்டம் துவக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி., நிஷா துவக்கி வைத்து, திட்டம் குறித்து மக்கள் மத்தியில் பேசினார். தோடர் பழங்குடியின மக்கள் திரளாக பங்கேற்றனர்.

