/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீணாகியுள்ள 'இ-டாய்லெட்': நடைபாதையில் இடையூறு
/
வீணாகியுள்ள 'இ-டாய்லெட்': நடைபாதையில் இடையூறு
ADDED : அக் 03, 2025 08:53 PM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா நடைபாதையில், 'இ-டாய்லெட்' பராமரிப்பு இல்லாமல் வீணாகி வருவதுடன், கடைகளும் வைக்கப்பட்டுள்ளதால், உள்ளூர்மக்கள், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்படுகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, சாதாரண நாட்களில் கூட, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் நலன் கருதி, பூங்காவுக்கு செல்லும் முக்கிய நடைபாதையில், அர்ச்சனா பட்நாயக் கலெக்டராக இருந்தபோது, 'இ-டாய்லெட்' அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில், சிறப்பாக பராமரிக்கப்பட்ட டாய்லெட்டை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில், போதிய பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால், துர்நாற்றம் வீசுவதுடன், டாய்லெட் சேதமடைந்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் யாரும் செல்வதில்லை. தவிர, சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல, இடையூறாக உள்ளது. இதனால், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதே போல, நடைபாதையில் சுற்றுலா பயணிகள் நடக்க முடியாத அளவுக்கு கடைகளை வைத்துள்ளதால், பலரும் சாலையில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.
மக்கள் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில்,'ஊட்டி தாவரவியல் பூங்கா நடைபாதையில், பராமரிப்பு இல்லாத இ-டாய்லெட்' மற்றும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலையில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இப்பகுதிகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.