/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் பருவமழையில் நிரம்பிய நீர் நிலைகள்; வன உயிரினங்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது
/
தொடரும் பருவமழையில் நிரம்பிய நீர் நிலைகள்; வன உயிரினங்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது
தொடரும் பருவமழையில் நிரம்பிய நீர் நிலைகள்; வன உயிரினங்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது
தொடரும் பருவமழையில் நிரம்பிய நீர் நிலைகள்; வன உயிரினங்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது
ADDED : ஜூலை 21, 2025 08:47 PM

கூடலுார்; முதுமலை, மசினகுடி பகுதியில் தொடரும் பருவமழையில், வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்நிலைகள், நிரம்பியதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதியில், கடந்த ஆண்டு டிச., மாதம் ஏற்பட்ட பனி பொழிவு தொடர்ந்து, கோடை மழையும் ஏமாற்றியது. வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு தாவரங்கள் கருகி மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்த நிலையில் காணப்பட்டது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பசுமை வனத்தை எதிர்பார்த்து, வந்த சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். மார்ச் மாதம் வரை இதேநிலை தொடர்ந்தது. வனத்தீ அபாயமும் ஏற்பட்டது. ஏப்., மே மாதத்தில், 'வறட்சியின் தாக்கம் அதிகமாக இருக்கும்' என, எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்,ஏப்., மாதம் கோடை மழை துவங்கியது. இதனால், வறட்சி நீங்கி பசுமையான சூழ்நிலைக்கு வனப்பகுதி மாறி உள்ளது. அதேபோன்று ஜூன் மாதம் துவங்க வேண்டிய பருவமழை, முன்னதாக மே மாதம் கடைசியில் துவங்கியது.
தொடரும் பருவ மழையினால் வனப்பகுதி முழுமையாக பசுமைக்கு மாறியதுடன், வன விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் மாயாறு மற்றும் அதன் கிளை ஆறுகள், ஹோம்பட்டா, கேம்ஹட் தடுப்பணைகள் உள்ளிட்ட நிர் ஆதாரங்கள், தொட்டிகள், மழைநீர் சேமிப்பு குட்டைகள் முழுமையாக நிரம்பியது.
வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் நடப்பு ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்னதாக பருவமழை துவங்கி, பெய்து வருவதால், வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் அனைத்து நீர் நிலைகளும் முழுமையாக நிரம்பி உள்ளது.
தொடர்ந்து நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. மிதமான காலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால். அடுத்த ஆண்டு கோடையில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது,' என்றனர்.