நீலகிரியில் பரவலாக பெய்து வரும் மழையால்... நீர்மட்டம் உயர்வு! மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
நீலகிரியில் பரவலாக பெய்து வரும் மழையால்... நீர்மட்டம் உயர்வு! மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
UPDATED : ஜூலை 06, 2026 07:04 PM
ADDED : ஜூலை 06, 2026 07:01 PM

ஊட்டி: நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், மின் உற்பத்திக்கான அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 'குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், காட்டு குப்பை,' உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள பைக்காரா, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட. 13 அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வாயிலாக, மின் உற்பத்திக்கான, 32 பிரிவுகளில், 833.65 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
மாவத்தில் நடப்பாண்டு, கோடை மழை பொய்த்தது. தென்மேற்கு பருவ மழையின் சராசரி அளவு, 60 செ.மீ., என்ற நிலையில், கடந்த மாதம் வரை இந்த சராசரி அளவு எட்டப்படவில்லை. இதனால், அணைகளில் தண்ணீர் குறைந்து, மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு, சமவெளி பகுதிக்கான மின் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இம்மாதம் தாமதமாக துவங்கிய பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது.
நீர் வரத்து அதிகரிப்பு இதனால், அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைகளுக்கு வரும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு, 100 கனஅடி வீதம் தண்ணீர் வருவதால், மேற்கண்ட அணைகளில், 5 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், குறைந்தளவில் நடந்த மின் உற்பத்தியை அதிகரிக்க மின் உற்பத்தி வட்டம் முடிவு செய்துள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'நீலகிரியின் பருவ மழையை கணக்கிட்டு தான் ஆண்டுதோறும் மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் திட்டத்தை சமாளித்து வருகிறோம். நடப்பாண்டில் கோடை மழை பொய்த நிலையில், தென் மேற்கு பருவ மழையும் தாமதமானது. அணைகளில் நீர்மட்டம் குறைந்தது. இதனால், குடிநீர் உட்பட மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. தற்போது பெய்யும் மழை பருவமழை தொடர்ந்தால் மட்டுமே நடப்பாண்டுக்கான மின் தேவையை தடையின்றி சமாளிக்க முடியும்,' என்றனர்.
