/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை தொடர்வதால் மாவட்டத்தில் 13 அணைகளில் நீர்மட்டம் உயர்வு! 650 மெகாவாட் மின் உற்பத்தி நடப்பதால் சிக்கல் இல்லை
/
மழை தொடர்வதால் மாவட்டத்தில் 13 அணைகளில் நீர்மட்டம் உயர்வு! 650 மெகாவாட் மின் உற்பத்தி நடப்பதால் சிக்கல் இல்லை
மழை தொடர்வதால் மாவட்டத்தில் 13 அணைகளில் நீர்மட்டம் உயர்வு! 650 மெகாவாட் மின் உற்பத்தி நடப்பதால் சிக்கல் இல்லை
மழை தொடர்வதால் மாவட்டத்தில் 13 அணைகளில் நீர்மட்டம் உயர்வு! 650 மெகாவாட் மின் உற்பத்தி நடப்பதால் சிக்கல் இல்லை
ADDED : ஜூன் 27, 2025 09:19 PM

ஊட்டி; நீலகிரியில் ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருவதால், அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து, நாள்தோறும், 650 மெகாவாட் வரை தடையில்லாமல் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையங்கள் உள்ளன. அப்பர் பவானி, போர்த்தி மந்து, பைக்காரா, குந்தா, கெத்தை, அவலாஞ்சி, கிளன்மார்கன் உட்பட, 13 அணைகளில், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
இங்குள்ள, 12 மின் நிலையங்களில் உள்ள, 32 மின் பிரிவுகள் வாயிலாக, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. கடந்த ஆண்டு இறுதி முதல் மழை இல்லாத காரணத்தால் பல அணைகளில் தண்ணீரின் அளவு குறைந்து மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.
மாவட்டத்தின் பெரிய அணைகளான அப்பர்பவானி, போர்த்திமந்து உட்பட சில அணைகளை தவிர, பல அணைகளில், 60 சதவீதம் அளவுக்கு தண்ணீர் குறைந்தது. இதனால், 12 மின் பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 200 முதல் 400 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின் உற்பத்தி நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கான மின் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.
நடப்பாண்டில் கூடுதல் மழை
இந்நிலையில், நடப்பாண்டில், மார்ச் மாதம் முதல் அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து, மே மாதம், 15ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்தது.
15 நாட்கள் கனமழை பெய்ததால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. அப்பர் பவானி, போர்த்தி மந்து, பைக்காரா, குந்தா, கெத்தை உட்பட சில அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து, 90 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது.
இதனால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்த, சில பிரிவுகளில் மின் உற்பத்தி துவக்கப்பட்டு, 12 மின் நிலையங்களிலும் தடையில்லாமல் மின் உற்பத்தி நடந்து வருகிறது. நடப்பாண்டு இறுதி வரை சமவெளி பகுதிக்கு தேவையான, மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
650 மெகாவாட் உற்பத்தி
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஈரோடு, மதுரை, சென்னை மைய மின் பிரிவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பிற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. அணைகளில் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பதால் மின் உற்பத்தியும் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நாள்தோறும், 650 மெகாவாட் வரை மின் உற்பத்தி எட்டியுள்ளது. கூட்டு குடிநீர் திட்டத்திற்கான தண்ணீரும் சீராக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நடைபாண்டு இறுதிவரை தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளலாம்,' என்றனர்.

