/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை வெப்பம் காரணமாக நீலகிரி அணைகளில் சரியும் நீர்மட்டம்! மலை மீது மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிக்கல்
/
கோடை வெப்பம் காரணமாக நீலகிரி அணைகளில் சரியும் நீர்மட்டம்! மலை மீது மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிக்கல்
கோடை வெப்பம் காரணமாக நீலகிரி அணைகளில் சரியும் நீர்மட்டம்! மலை மீது மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிக்கல்
கோடை வெப்பம் காரணமாக நீலகிரி அணைகளில் சரியும் நீர்மட்டம்! மலை மீது மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிக்கல்
ADDED : மார் 09, 2025 10:58 PM

ஊட்டி: கோடை வெப்பம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீரின் அளவு குறைந்து வருவதால், தொடர் மின் உற்பத்தி; கோடை சீசனின் போது, மாவட்டத்தின் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள, 12 மின் நிலையங்களில், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. மாவட்டத்தில் பெரிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர் ராட்சத குழாய் மூலம், அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லுார் மின் நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டு, மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அப்பர் பவானி அணை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சரிந்து வரும் நீர்மட்டம்
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கோடை வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக, மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
மொத்த கொள்ளவான, 210 அடியில் தற்போது 120 அடி நீர் இருப்பு மட்டுமே உள்ளது. பைக்காரா, 100 அடிக்கு, 40 அடி வரை தண்ணீர் உள்ளது. 130 அடி கொண்ட போர்த்தி மந்து அணையில், குந்தா நீரேற்று மின் திட்டப் பணிக்காக, 80 அடி நீர் வெளியேற்றப்படு, 50 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது.
184 அடி கொண்ட எமரால்டு அணையிலிருந்து, 120 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு, 64 அடிவரை தண்ணீர் உள்ளது. அதே போல், பிற அணைகளிலும் கோடை தாக்கம் காரணமாக, தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
மறுபுறம், சமவெளி மற்றும் மலை மாவட்டத்தில் தொடரும் கடும் வெப்பம் காரணமாக, மக்களுக்கான மின் தேவையும் அதிகரித்துள்ளது.
இதை ஈடுசெய்ய தொடர் மின் உற்பத்தி செய்ய, அணைகள் திறக்கப்பட்டதால், அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு குறைந்து வருகிறது.
இதனால், கோடையின் தாக்கம் அடுத்த மாதம் அதிகரிக்கும் போது, தேவையான மின் உற்பத்திக்கும்; மக்களின் குடிநீர் தேவைக்கும் பெரும் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடை மழை வந்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தினசரி, 400 மெகாவாட் உற்பத்தி
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கோடை வெப்பம் காரணமாக அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் மின் உற்பத்திக்கு அவ்வப்போது எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. தவிர, கூட்டு குடிநீர் திட்டத்தில், நீர் இருப்பை கருத்தில் கொண்டு, மக்களுக்கான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
தற்போது, மாவட்டத்தில் உள்ள அணைகளில், 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பில் உள்ளது. கோடையை எதிர்கொள்ள, குந்தா, கெத்தை, மாயார் உட்பட்ட அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், நாள்தோறும், 400 மெகாவாட் மட்டும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்,கோடை மழை பெய்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்,' என்றனர்.