/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீர் நிலைகள் பாதுகாப்பு! களம் இறங்கிய வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம்
/
நீர் நிலைகள் பாதுகாப்பு! களம் இறங்கிய வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம்
நீர் நிலைகள் பாதுகாப்பு! களம் இறங்கிய வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம்
நீர் நிலைகள் பாதுகாப்பு! களம் இறங்கிய வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம்
ADDED : பிப் 18, 2025 09:47 PM

குன்னுார் ; ராணுவ மையம் அமைந்துள்ள, குன்னுார் வெலிங்டன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து நீர் நிலைகளை துாய்மைப்படுத்தி பாதுகாக்கும் பணியில், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் களம் இறங்கியுள்ளது.
'உலகளவிலான மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல்' என்ற கருப்பொருளின் கீழ், வரும் ஜூன், 5ல் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நோக்கத்தை அடைய, அனைத்து துறைகள், நிறுவனங்களும், பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்; வாகனங்களின் அதிகரிப்பால் ஏற்படும் காற்று மாசு; ஓசோன் படலத்தை பாதிக்கும் கார்பன் மாசு; அதிகரித்து வரும் 'பிளாஸ்டிக்' பொருட்களால் ஏற்படும் மாசு ஆகியவை காரணிகளாக உள்ளன.
இவற்றை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
முதலில் களம் இறங்கிய கன்டோன்மென்ட்
இதனை நீலகிரி மாவட்டத்தில் முதலில் செயல்படுத்தும் வகையில், குன்னுார் அருகே, ராணுவ மையம் அமைந்துள்ள, வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் முன் வந்துள்ளது. அதில், கன்டோன்மென்ட் பகுதிகள் அனைத்தையும் தற்போது உள்ளதை விட மேலும் துாய்மை படுத்தவும், மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில், காற்று துாய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வனப்பகுதியில் நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மேலும், மலை மாவட்ட நீர்நிலைகளில் பல்வேறு கழிவுகள் கலந்து வரும் நிலையில், முதற்கட்டமாக, கன்டோன்மென்ட் நீர்நிலைகளை துாய்மைபடுத்தி பாதுகாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதில், அனைத்து நீர் நிலைகளிலும் பொக்லைன் உதவியுடன் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கழிவுகள் அனைத்து அகற்றப்படும், மழை காலம் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் தண்ணீர் எளிதில் செல்ல அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் வாழும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினீத் பாபாசாகிப் லோட்டே கூறுகையில், ''எதிர்கால சந்ததியினருக்கு நிலையான மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலைகளை உறுதி செய்யவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது மிக முக்கியம். இதனை அடிப்படையாக கொண்டு, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, நடப்பாண்டு விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது.
முதலில், மலைகளின் தாயாக உள்ள நீர்நிலைகளை அகலப்படுத்தி பாதுகாப்பது; சுற்றுச்சூழல் பாதுகாப்பு கள பணிகளை ஏற்படுத்துவது ; மரங்கள் நடவு செய்வது; 'பிளாஸ்டிக்' மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவது,' என, பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான பிரசார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஜூன், 5ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இந்த பணி தேசிய அளவில் அனைத்து கன்டோன்மென்ட் பகுதிகளிலும் நடந்து வருகிறது,'' என்றார்.