/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் திட்ட பணிக்காக அணைகளில் தண்ணீர் வெளியேற்றம்
/
மின் திட்ட பணிக்காக அணைகளில் தண்ணீர் வெளியேற்றம்
ADDED : அக் 12, 2025 10:16 PM
ஊட்டி; குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக எமரால்டு, போர்த்தி மந்து அணைகளில் இருப்பில் உள்ள நீர் வெளியேற்றப்பட உள்ளதால், கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே காட்டுகுப்பை பகுதியில், 1,850 கோடி ரூபாய் மதிப்பில், 500 மெகாவாட்டுக்கான குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.
2 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து கட்டுமான பணிகள் மற்றும் மின் சாதனங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
குந்தா நீரேற்று மின் திட்டம் பணிகள் நடக்கும் பகுதியை ஒட்டியுள்ள எமரால்டு, போர்த்திமந்து அணைகளில் தண்ணீர் முழு கொள்ளளவில் இருப்பதால் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, எமரால்டு, போர்த்திமந்து அணையிலிருந்து நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த இரு வாரங்களாக எமரால்டு அணையில் இருந்து டனல் வழியாக குந்தா அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு குந்தா அணையில் இருந்து இரு மதகுகளாக வினாடிக்கு, 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், போர்த்திமந்து அணையில் உள்ள தண்ணீரை எமரால்டு அணைக்கு கொண்டு வந்து வெளியேற்றப்பட்டு, நீரோடை வழியாக குந்தா அணையில், இரண்டு மதகுகள் வழியாக மீண்டும் வெளியேற்றப்பட உள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வருவாய் துறை முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது.
குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் பிரபு கூறுகையில், ''குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக எமரால்டு,போர்த்தி மந்து அணைகளிலிருந்து, தேவைக்கேற்ப தண்ணீர் வெளியேற்றினால் தான் பணிகள் மேற்கொள்ள முடியும்.
இதனால், வினாடிக்கு, 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. நாளை (இன்று) காலை, 11:00 மணி முதல் வெளியேற்றப்படுகிறது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய்துறை வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது,''என்றார்.