/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீராதாரங்களில் 65 சதவீதம் குடிநீர் இருப்பு உள்ளதால் சீசனை சமாளிக்கலாம்! கோடையில் தண்ணீர் திருட்டை தடுக்க முன்னெச்சரிக்கை தேவை
/
நீராதாரங்களில் 65 சதவீதம் குடிநீர் இருப்பு உள்ளதால் சீசனை சமாளிக்கலாம்! கோடையில் தண்ணீர் திருட்டை தடுக்க முன்னெச்சரிக்கை தேவை
நீராதாரங்களில் 65 சதவீதம் குடிநீர் இருப்பு உள்ளதால் சீசனை சமாளிக்கலாம்! கோடையில் தண்ணீர் திருட்டை தடுக்க முன்னெச்சரிக்கை தேவை
நீராதாரங்களில் 65 சதவீதம் குடிநீர் இருப்பு உள்ளதால் சீசனை சமாளிக்கலாம்! கோடையில் தண்ணீர் திருட்டை தடுக்க முன்னெச்சரிக்கை தேவை
ADDED : பிப் 21, 2025 10:47 PM

ஊட்டி; 'ஊட்டி நகராட்சி நீராதாரங்களில் கோடை சீசனை சமாளிக்கும் அளவுக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பில் உள்ளது; தண்ணீர் திருட்டு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. இங்கு, 1.30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.இதை தவிர, சுற்றுலா தலமான ஊட்டிக்கு ஆண்டுதோறும், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டியில், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. இதனால், ஊட்டி நகருக்கு குடிநீர் தேவை அதிகமாக உள்ளது.
65 சதவீதம் தண்ணீர் இருப்பு
ஊட்டியின் குடிநீர் தேவைக்கு, 'பார்சன்ஸ்வேலி, அப்பர் தொட்டபெட்டா, லோயர் தொட்டபெட்டா, அப்பர் கோடப்பமந்து, லோயர் கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி, மார்லிமந்து, கோரி சோலை, 'உள்ளிட்ட தடுப்பணைகளிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் நீராதாரங்கள் நிரம்பி காணப்படுகின்றன. அதில், ஊட்டி நகருக்கு தண்ணீர் வினியோகம் செய்யும், மார்லிமந்து அணையில், 54 அடியில், 45 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. பார்சன்ஸ் வேலி அணையில், 60 க்கு 50 அடி வரை நீர் இருப்பு உள்ளது, பிற தடுப்பணைகளில், 65 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது.
தண்ணீர் திருட்டை தடுக்கணும்
ஊட்டியில் அடுத்த மாதம் துவங்கி, ஏப்., மே மாதங்கள் வரை நடக்கும் கோடை சீசன் சமயத்தில், சமவெளி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் நிலவும் என்பதால், இம்முறை வழக்கத்தை விட சுற்றுலா பயணியரின் வருகை அதிகரிக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது,
அப்போது, மாவட்டத்தில் விதிமீறி இயங்கும் காட்டேஜ், தங்கும் விடுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, நீர் நிலைகளில் இருந்து சிலர் தண்ணீர் திருடி விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,' ஊட்டியில் அடுத்த மாதம் முதல் குடிநீர் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவதால், சில நீர் நிலைகளில் இரவில் சிலர் தண்ணீர் திருடி வாகனங்களில் விடுதிகளுக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறு நடந்த போது, பல வாகனங்கள் பிடிக்கப்பட்டு நகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், புற நகர் பகுதிகளில் சிலர் விவசாயத்துக்கும் தண்ணீர் திருடுவது வாடிக்கயைாக உள்ளது. இம்முறை அவ்வாறு நடக்காமல் இருக்க நீர்நிலை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.
கடும் நடவடிக்கை நிச்சயம்
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ''நகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான நீராதாரங்களில், 65 சதவீதம் அளவு தண்ணீர் இருப்பில் உள்ளதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.
அவ்வாறு சில வார்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் நகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து சமாளிக்கப்படும். உள்ளூர் மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கப்படும். யாராவது தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.