UPDATED : நவ 12, 2026 06:14 PM
ADDED : நவ 12, 2026 06:10 PM

குன்னூர்: குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனையில், கர்நாடகா மற்றும் கேரள மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குன்னுாரில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ள நிலையில், தீபாவளி விடுமுறைக்கு பிறகு, கர்நாடகா,கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் குன்னுார் டால்பின் நோஸ் காட்சி முனைக்கு வாகனங்களில் படையெடுத்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
காட்சி முனை பகுதியில் இருந்து, மேட்டுப்பாளையம் சமவெளி பகுதிகள், வளைந்து செல்லும் ரயில் பாதைகள், பழங்குடியினர் குடியிருப்புகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். தற்போது, சுற்றுலா மையங்களில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், அங்குள்ள கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
