ADDED : செப் 20, 2026 03:31 PM

கோத்தகிரி: -
கோத்தகிரியில் பரவலாக பெய்து வரும் மழைக்கு பீட்ரூட் தோட்டங்களில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோத்தகிரியில் நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில் மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு, குறித்த நேரத்தில் மழை பெய்யாததால், பருவம் கடந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கோத்தகிரி அருகே, நெடுகுளா, கூக்கல்தொரை, ஈளாடா உள்ளிட்ட பகுதிகளில், அதிக ஏக்கர் பரப்பளவில் பீட்ரூட் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மலை காய்கறி தோட்டத்தில் களை எடுத்து, உரமிட்டு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, ஒரு கிலோ பீட்ரூட், மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி மண்டிகளில், 60 முதல், 70 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. உள்ளூர் கடைகளில், 75 முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில், பீட்ரூட் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் தோட்டங்களில் களை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
