/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதுகாப்பான குடிநீர் எது? ஜல்ஜீவன் கூட்டத்தில் விளக்கம்
/
பாதுகாப்பான குடிநீர் எது? ஜல்ஜீவன் கூட்டத்தில் விளக்கம்
பாதுகாப்பான குடிநீர் எது? ஜல்ஜீவன் கூட்டத்தில் விளக்கம்
பாதுகாப்பான குடிநீர் எது? ஜல்ஜீவன் கூட்டத்தில் விளக்கம்
ADDED : ஜன 31, 2024 11:44 PM
பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அருணா நகரில் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது. இதில், இரண்டாம் நாள் முகாமில் பாதுகாப்பான குடிநீர் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அதில், நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டது, பாதுகாப்பு இல்லாதது என, இரு வகைகளாக பிரிக்கலாம். குளம், கிணறு மற்றும் ஆறு ஆகியவைகளில் இருந்து கிடைக்கின்ற நீர் பாதுகாப்பு இல்லாதது.
நிலத்தடி நீரானது, நில பரப்பிலிருந்து பல மண் படிமானங்களின் ஊடே நுழைந்து, கீழ்நோக்கி செல்லும்போது வடிகட்டப்படுவதால், அந்த நீர் பாதுகாப்பானது. பொது மக்களுக்கு வேண்டிய குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைக்கான நீர் வழங்குவதில், ஆழ்துளை கிணறு, மற்றும் கை பம்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆறு, ஏரி, குளம், கிணறு இவற்றிலிருந்து பெறும் குடிநீர் பார்வைக்கு சுத்தமானதாக இருந்தாலும், நோய்க்கிருமிகள், உப்புகள் மற்றும் மலத் துகள்கள் கலந்து இருக்கும் அபாயம் உண்டு.
இவை பாதுகாப்பான குடிநீர் அல்ல. பாதுகாப்பான குடிநீர் என்பது பாதுகாக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில், சுற்றுப்புறமும் சுத்தமாகவும், கழிவு நீர் தேக்கமும் இல்லாமல் முறையாக பேணப்பட்டு ஆழ்குழாய் கிணற்றிலிருந்து பெறப்படும் நீர் ஆகும்.
நீரானது தெளிவாக கண்ணாடி போல் இருக்க வேண்டும். ஒவ்வாத சுவை, மனம் இருக்கக் கூடாது. உப்பு தேவையான அளவுக்குள் இருக்க வேண்டும். உடல்நலத்தை பாதிக்கும் உப்புக்கள் இருக்கக்கூடாது.
நீர் வழங்கும் அமைப்புகள் அரிமானம், உப்பு படிதல் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடாது. நீர் குடிப்பதற்கும், வீட்டு உபயோகங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய தன்மையில் இருத்தல் வேண்டும். நமது கிராமங்களில், 80 சதவீத நோய்கள் அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் தான் வருகிறது என, மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்' என்றனர்.