/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய பள்ளி கட்டடம்: திறப்பு விழா எப்போது?
/
புதிய பள்ளி கட்டடம்: திறப்பு விழா எப்போது?
ADDED : டிச 18, 2023 11:02 PM

மேட்டுப்பாளையம்;புதிய பள்ளி கட்டடம் கட்டி, அனைத்து பணிகளும் முடித்த நிலையில், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
காரமடை ஊராட்சி ஒன்றியம் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஜடையம்பாளையம் புதூரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளி கட்டடம் பழுதடைந்த நிலையில், இடித்துவிட்டு, 32.22 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக, கட்டடம் கட்டும் பணிகள் கடந்தாண்டு துவங்கியது.
தற்போது தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி கட்டடத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. புதிதாக கட்டிய பள்ளி கட்டட வகுப்பறை சுவர்களில் தமிழ், ஆங்கில எழுத்துக்கள், வான்வெளி, இயற்கை சம்பந்தமான ஓவியங்கள், பாடம் சம்பந்தமான படங்கள் வரையப்பட்டுள்ளன.
வகுப்பறை நுழைவு வாயிலில் உள்ள ஐந்து தூண்களில், வாய்ப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன. சுவற்றில் நவீன எழுது பலகையும், குழந்தைகள் சிரமம் இல்லாமல் வகுப்பறைக்கு நடந்து செல்ல, சாய்தளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
வகுப்பறையில் மின்விசிறி, மின்விளக்குகள் பொருத்துப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பள்ளி கட்டட வகுப்பறைகள் திறக்கப்படாமல் உள்ளது.
எனவே புதிதாக கட்டிய பள்ளி கட்டட வகுப்பறைகளை உடனடியாக திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.