/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் கொட்டி கிடக்கும் பிரச்னைகளுக்கு விடியல் எப்போது? மனு போர் நடத்தியும் எவ்வித பயனுமில்லை
/
மலையில் கொட்டி கிடக்கும் பிரச்னைகளுக்கு விடியல் எப்போது? மனு போர் நடத்தியும் எவ்வித பயனுமில்லை
மலையில் கொட்டி கிடக்கும் பிரச்னைகளுக்கு விடியல் எப்போது? மனு போர் நடத்தியும் எவ்வித பயனுமில்லை
மலையில் கொட்டி கிடக்கும் பிரச்னைகளுக்கு விடியல் எப்போது? மனு போர் நடத்தியும் எவ்வித பயனுமில்லை
ADDED : மே 15, 2025 11:18 PM

குன்னுார் : 'நீலகிரி மாவட்டத்தில் தீர்க்கப்படாத பல பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலின் போதும், நீலகிரி மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு வரும் அரசியல் கட்சியினர், வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கம். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் அடிப்படை பிரச்னைகளை கூட தீர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை.
இதனால், மலை மாவட்டத்தில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும், தேயிலை; மலை காய்கறி விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.
தொழிற்சாலைகளுக்கு எரிபொருள்
தென்னக நீர் தொட்டியான நீலகிரியில், ஐகோர்ட் உத்தரவான, யூகலிப்டஸ், பைன், அக்கேசியா மரங்களை, அகற்றி, கூட்டுறவு உட்பட அனைத்து தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலைக்கு எரிபொருளாக வழங்கினால் தேயிலை உற்பத்தி செலவு குறையும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வெளியில் இவற்றை வாங்கினால் கூடுதல் விலை கொடுக்க வேண்டி உள்ளது.
திட்டத்தை மாற்ற வேண்டும்
இயற்கை வளம் நிறைந்த குன்னுார் பந்துமை நீராதார பகுதியை பாதுகாப்பதற்காக கோர்ட் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அதே இடத்தில், ஐ.டி. பார்க் கொண்டு வரும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அந்த திட்டத்தை குந்தா பகுதிக்கு கொண்டு சென்றால், அங்குள்ள பலர் பயன்பெற வாய்ப்புள்ளது.
கிராம மக்களுக்கு இழப்பு
பழங்குடி, பூர்வகுடி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறு குறு விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வசிக்கும் கிராமங்களில், 'கார்ப்பரேட்' தேயிலை எஸ்டேட் வருவாயை கருத்தில் கொண்டு, அவை, 11 பேரூராட்சிகளாக மாற்றப்பட்டன. அவற்றுக்கு பேரூராட்சிக்கு தகுதி இல்லை என அறிந்தும், உள்ளாட்சி அலுவலர்கள் தங்கள் பணி பாதுகாப்புக்காக, மீண்டும் அவற்றை ஊராட்சியாக மாற்றவிடாமல் வைத்துள்ளனர்; இதனால், கிராமங்களுக்கான, 100 நாள் வேலை, 'ஸ்வட்ச் பாரத், ஜல்ஜீவன்' உள்ளிட்ட திட்டங்களை பேரூராட்சியில் வாழும் ஏழை மக்கள் இழந்துள்ளனர்.
ஐகோர்ட உத்தரவு மீறல்
மாவட்டத்தில், 450 அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது, 335 பஸ்கள் மட்டுமே இயங்குகிறது. 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய ஐகோர்ட் உத்தரவிட்ட போதும், போக்குவரத்து கழகம் பயணிகளிடம் பகல் கொள்ளையடித்து வருகிறது. மலை பகுதிகளில், 20 சதவீத கூடுதல் கட்டணமும் வசூலிக்கிறது. இந்த பிரச்னைக்கு அரசு போக்குவரத்து கழகம் தீர்வு காணப்படவில்லை.
ஆவின் பால் விலை உயர்வு
தமிழகத்தில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் ஒரே விலையில் விற்கப்படும் நிலையில், நீலகிரியில் மட்டும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதற்கு தீர்வு காணவில்லை. அரை லிட்டர் டிலைட் பால் இதர மாவட்டங்களில், 22 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், இங்கு, 5 ரூபாய் கூடுதலாக, 27 ரூபாய்க்கும்; 35 ரூபாய்க்கான அரை லிட்டர் தயிர், 8 ரூபாய் கூடுதலாக, 43 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இது குறித்து நுகர்வோர் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
கிராம இணைப்பு பஸ் இல்லை
புறநகர் கிராம பஸ்களுக்கு விடியல் பயணம் இல்லாத நிலையில், மக்களின் கோரிக்கையால், 35 கி.மீ., வரை செல்லும், 93 புறநகர் பஸ்கள் விடியலுக்கு மாற்றப்பட்டது. எனினும், மற்ற மாவட்டங்களை போன்று இங்கு பல கிராம மகளிருக்கு விடியல் பயணம் இல்லை. நகரில் அதிக மினி பஸ்கள் உள்ள போதும், பெரும்பாலான கிராமங்களை இணைக்கும் மினி பஸ்கள் இல்லாததால் காலை, மாலை நேரங்களில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியும் போதிய பஸ்கள் இல்லாததால் எவ்வித பயனும் இல்லை.
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''மாணவர்களுக்கு தனி சிறப்பு பஸ்கள் இயக்குவது; முறையாக இயங்காத மினி பஸ் உரிமங்களை, ரத்து செய்து அவற்றுக்கு பதிலாக அரசு பஸ்களை இயக்குவது; பொருளாதாரத்தில் பின்தங்கிய மலை மக்களின் தேயிலை, விவசாய பிரச்னைக்கும் மாநில அரசு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.