/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானை
/
அரசு பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானை
ADDED : அக் 30, 2025 10:42 PM

கூடலூர்: கூடலூர், புளியாம்பாறை அரசு பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானை, பூந்தொட்டி, காய்கறி தோட்டத்தை சேதப்படுத்தி சென்றதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர், புளியாம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில், பழங்குடியினர் உள்ளிட்ட 210 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளியைச் சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்க பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கான நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், நேற்று, காலை பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானை, பள்ளி கட்டடத்தின் நுழைவாயிலில் இருந்த பூந்தொட்டிகளை சேதப்படுத்தியதுடன், சமையலறை அருகே, உள்ள சிறிய காய்கறி தோட்டத்தையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.
வழக்கம் போல நேற்று, பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் இதனை பார்த்து அச்சமடைந்தனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, அப்பகுதி வனத்தில் முகாமிட்டுள்ள யானையை கண்காணிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பெற்றோர் கூறுகையில், 'இக்கிராமம் வனத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் கிராமத்துக்கு இரவு நேரங்களில் அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்கிறது. வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும் தடுக்க முடியவில்லை. காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, பள்ளி வளாகத்தை சுற்றி, சுவர் அமைக்க வேண்டும்' என்றனர்.

