/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் வாகனங்களை அச்சுறுத்தும் காட்டு யானை; அச்சத்தில் சுற்றுலா பயணிகள்: கண்காணிப்பில் வனத்துறை
/
சாலையில் வாகனங்களை அச்சுறுத்தும் காட்டு யானை; அச்சத்தில் சுற்றுலா பயணிகள்: கண்காணிப்பில் வனத்துறை
சாலையில் வாகனங்களை அச்சுறுத்தும் காட்டு யானை; அச்சத்தில் சுற்றுலா பயணிகள்: கண்காணிப்பில் வனத்துறை
சாலையில் வாகனங்களை அச்சுறுத்தும் காட்டு யானை; அச்சத்தில் சுற்றுலா பயணிகள்: கண்காணிப்பில் வனத்துறை
ADDED : மார் 28, 2025 09:17 PM

கூடலுார்; முதுமலை எல்லையில் உள்ள, பந்திப்பூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை தடுத்து நிறுத்தி, அச்சுறுத்தும் காட்டு யானையால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம்; கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில், இரவு நேரங்களில் வன விலங்குகளின் பாதுகாப்யை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக சொல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு, 9:00 முதல் காலை 6:00 மணி வரை, அரசு பஸ் தவிர, பிற வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
'பகல் நேரத்தில் இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள், சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் வனவிலங்குகளின் அருகே வாகனங்கள் நிறுத்தி, இடையூறு ஏற்படுத்த கூடாது,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதுமலையை ஒட்டிய,பந்திப்பூர் புலிகள் காப்பகம் சாலையோரம் உலா வரும் காட்டு யானை, இவ்வழியாக இயக்கப்படும் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், வாகனங்களை துரத்தியும் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் மாலை இவ்வழியாக சென்ற வாகனத்தை திடீரென காட்டு யானை மறித்து நின்றது. அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தினார். வாகனத்தில் இருந்தவர்கள் அமைதியாக காத்திருந்தனர்.
வாகனத்தின் முன் வந்து சிறிது நேரம் நின்ற காட்டு யானை, வாகனத்தை ஏதும் செய்யாமல் அமைதியாக வனப்பகுதிக்குள் சென்றது. வாகனத்தில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவத்தால், முதுமலை- பந்திப்பூர் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள்; ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'குறிப்பிட்ட இந்த யானையை வன ஊழியர்கள் கண்காணித்து விரட்டி வருகின்றனர். வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். உதவி தேவை எனில் வனத்துறையை அழைக்கலாம்,' என்றனர்.