ADDED : ஏப் 01, 2026 10:14 PM

கூடலுார்: மசினகுடி வாழை தோட்டம் பகுதியில், அதிகாலையில் நுழைந்த காட்டு யானை, ரேஷன் கடை, டீக்கடையை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை, மசினகுடி வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் இரவில், அவ்வப்போது வரும் மக்னா யானை, வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்இரவில் இப்பகுதியில் நுழைந்து காட்டு யானை, ரேஷன் கடையை சேதப்படுத்தியது. நேற்று, அதிகாலை மீண்டும் அப்பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, ரேசன் கடையை சேதப்படுத்தி இரண்டு மூட்டை அரிசி ஒரு மூட்டை கோதுமையை வெளியே எடுத்து சேதம் செய்தது. தொடர்ந்து அருகே உள்ள டீக்கடையில் ஜன்னல் மற்றும் முன்பகுதியை இடித்துள்ளது. தகவல் அறிந்து சென்ற வன ஊழியர்கள் யானையை விரட்டினர்.
இச்சம்பத்தால் அச்சமடைந்துள்ள மக்கள், 'யானை, இப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'வன ஊழியர்கள் யானை கண்காணித்து இப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், ரேஷன் கடையை சுற்றி சோலார் மின் வேலி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.
