/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெற்பயிரை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள்
/
நெற்பயிரை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள்
ADDED : செப் 18, 2024 08:07 PM

கூடலுார்: 'கூடலுார் தேன்வயல் பகுதியில், தொடர்ந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை,' என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கூடலுார், தொரப்பள்ளி, குணில், தேன்வயல் பகுதியில், கடந்த இரண்டு மாதமாக, இரண்டு காட்டு யானைகள் இரவில் விவசாய தோட்டத்தில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன. அப்பகுதி மக்களும், வனத்துறையினர் யானைகளை விரட்டினாலும், இப்பகுதிக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், தற்போது மூன்று யானைகள் இரவில் வயல்களில் முகாமிட்டு, நெற்பயிர்களை சேதப்படுத்தி, விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
வனத்துறையினர் அவ்வப்போது வந்து விரட்டினாலும், அவைகள் மீண்டும் வயல்களில் முகாமிட்டு நெற்பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. கடந்த மூன்று நாட்களாக, இரவு வயல்களில் நுழைந்த யானைகள், நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
விவசாயிகள் கூறுகையில், 'நெல் நடவு செய்த நாள் முதல், காட்டு யானைகள், தொடர்ந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. வனத்துறையினர், பட்டாசு வெடித்து பெயரளவிற்கு யானை விரட்டி செல்கின்றனர். தொடரும் பிரச்னையை வனத்துறையினரும் கண்டு கொள்வதில்லை.
எனவே, யானை சேதப்படுத்திய நெற்பயிர்களுக்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்குவதுடன், காட்டு யானைகள் விவசாய பகுதிக்கு நுழைவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.
தேன்வயல் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள், நெற்பயிர்களை சேதப்படுத்தியது.