/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
100 நாள் வேலை திட்டப்பணிகளில் ஊழல் அம்பலமாகுமா?சமூக தணிக்கை நடத்த அரசு உத்தரவு
/
100 நாள் வேலை திட்டப்பணிகளில் ஊழல் அம்பலமாகுமா?சமூக தணிக்கை நடத்த அரசு உத்தரவு
100 நாள் வேலை திட்டப்பணிகளில் ஊழல் அம்பலமாகுமா?சமூக தணிக்கை நடத்த அரசு உத்தரவு
100 நாள் வேலை திட்டப்பணிகளில் ஊழல் அம்பலமாகுமா?சமூக தணிக்கை நடத்த அரசு உத்தரவு
ADDED : ஆக 26, 2024 01:07 AM
அன்னூர்:கோவை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும், 100 நாள் வேலை திட்ட பணிகளில் சமூக தணிக்கை செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக ஊழல் வெளிப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், குளம், குட்டைகள் தூர் வாருதல், மரக்கன்றுகள் நடுதல், மண் பாதை அமைத்தல், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன.
புகார்
கோவை மாவட்டத்தில், தினமும் 15,000 பேர் இத்திட்டத்தில் பணி புரிகின்றனர். தினசரி சம்பளமாக 319 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பணிகள் செய்யப்படாமல் நிதி பெறப்படுவதாகவும், இயந்திரங்களை பயன்படுத்தி பணிகள் செய்வதாகவும் புகார் சென்றது.
இதையடுத்து மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் செய்யப்பட்ட பணிகளை அடுத்த நிதியாண்டில் சுதந்திரமான தனிநபர்கள் மூலம் கள ஆய்வு செய்து, சமூகத் தணிக்கை அறிக்கை தயாரித்து, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். செய்யப்பட்ட பணிகள், பயனடைந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்தையும் கூட்டத்தில் வாசிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
எனினும் 2023 ஏப். 1 முதல், 2024 மார்ச் 31 வரை முடிக்கப்பட்ட பணிகளுக்கான சமூக தணிக்கை துவக்கப்படாமல் இருந்தது. சமூக ஆர்வலர்கள் பலரும் உடனே பணிகளை தணிக்கையாளர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் இரு வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
அரசு உத்தரவு
இந்நிலையில், 100 நாள் வேலைத்திட்ட பணிகளை சமூகத்தணிக்கை செய்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு தணிக்கை பிரிவு இயக்குனர் கிளாஸ்டன் புஷ்பராஜ், சென்னை நீங்கலாக மற்ற மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி முகமைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : மத்திய அரசின் சமூக தணிக்கை திட்ட விதிகளின்படி, தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நூறு நாள் திட்ட பணிகளை சமூக தணிக்கை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் 2016--17 முதல் 2021--2022 வரையிலான பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் மற்றும் ஆவணங்களையும் சமூகத் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி வருகிற செப். 2ம் தேதி துவங்கி, 2025 பிப். 28ம் தேதி வரை 23 சுற்றுக்களில், சராசரியாக ஒரு சுற்றுக்கு, 550 ஊராட்சிகள் என 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளிலும் சமூக தணிக்கை நடைபெற உள்ளது.
சமூக தணிக்கை துவங்கும் முதல் நாளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும். கிராம ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலக ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். மாலையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.
இரண்டாம் நாளில், வீடு வீடாகச் சென்று வேலை அட்டையை ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்து, பயனாளிகளிடம் கோரிக்கை மனு பெற வேண்டும். மூன்றாம் நாளில் பணிகளை கள ஆய்வு செய்து, அளவெடுக்க வேண்டும். நான்காவது நாள் தணிக்கை அறிக்கை தயாரிக்க வேண்டும். ஐந்தாவது நாள் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி தணிக்கை அறிக்கை வாசிக்க வேண்டும்.
தணிக்கை குழுவுக்கு உதவி செய்ய ஊராட்சி வள பயிற்றுனர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் அந்த ஊராட்சியில் வசிப்பவர்களாக இருக்கக் கூடாது. வட்டார அலுவலர்கள், சமூகத் தணிக்கைக்கு உரிய முன்னேற்பாடுகள் செய்து தர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'பல மாதங்களாக விடுத்த வேண்டுகோளின்படி, சமூக தணிக்கை துவங்குகிறது. இதனால் சில ஊராட்சிகளில் முறைகேடு கண்டறிய வாய்ப்புள்ளது,' என்றனர்.