/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்துமை பகுதியில் வரும் 'டைடல் பார்க்' திட்டத்தால் வனப்பகுதிக்கு பாதிப்பு? மாற்று இடத்தை தேர்வு செய்தால் குழப்பங்களுக்கு தீர்வு
/
பந்துமை பகுதியில் வரும் 'டைடல் பார்க்' திட்டத்தால் வனப்பகுதிக்கு பாதிப்பு? மாற்று இடத்தை தேர்வு செய்தால் குழப்பங்களுக்கு தீர்வு
பந்துமை பகுதியில் வரும் 'டைடல் பார்க்' திட்டத்தால் வனப்பகுதிக்கு பாதிப்பு? மாற்று இடத்தை தேர்வு செய்தால் குழப்பங்களுக்கு தீர்வு
பந்துமை பகுதியில் வரும் 'டைடல் பார்க்' திட்டத்தால் வனப்பகுதிக்கு பாதிப்பு? மாற்று இடத்தை தேர்வு செய்தால் குழப்பங்களுக்கு தீர்வு
ADDED : நவ 28, 2024 11:40 PM
குன்னுார் : குன்னுார் அருகே மரங்கள் அதிகம் உள்ள பந்துமை பகுதியில், 'டைடல் பார்க்' கொண்டு வருவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னுார் பந்துமை பகுதியில் பல்வேறு வகைகளில், நுாற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி செடிகள், தவிட்டு பழ செடிகள் உட்பட மூலிகை செடிகளும் உள்ளன.
நீராதாரங்கள் பாதிக்கும் அபாயம்
இங்கு, 2021ல், குன்னுார் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சராக இருந்த போது, 'டைடல் பார்க்' கொண்டு வர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்ப்பு கிளம்பியதால், திட்டம் கிடப்பில் இருந்தது.
இந்நிலையில், கடந்த, 24ம் தேதி, தொழில்துறை அமைச்சர் ராஜா, தற்போதைய அரசு கொறடாவாக உள்ள ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆகியோர், இந்த இடத்தில் 'டைடல் பார்க்' கொண்டு வர ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கு மீண்டும் மக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். 'பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் டைடல் பார்க் வந்தாலும், அருகில் உள்ள, 300 ஏக்கர் சோலை பாதிக்கப்படும்,' என, அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறிஞ்சி பூக்கள் அழியும்
ஜெகதளா கிடங்கு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சஜீவன் கூறுகையில், ''பந்துமை கிராமத்தின் அருகே டைடல் பார்க் கொண்டு வந்தால். அடர்ந்த காடும், அரிய வகை குறிஞ்சிபூக்கள், தவிட்டு பழம் உட்பட அரிய மூலிகை செடிகளும் அழிந்து விடும் அபாயம் உள்ளது.
அப்பகுதி அருகே உள்ள, சோலை வனப்பகுதியில் உருவாகும் நீரூற்றுகள் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. அங்குள்ள கருஞ்சிறுத்தை, அணில், கரடி, காட்டுமாடுகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் இடம் பெயர வாய்ப்புள்ளது.
இதனால், இந்த திட்டத்தை மாவட்டத்தில், வனப்பகுதி அல்லாத, காலி இடம் உள்ள பகுதியில் செயல்படுத்த வேண்டும். இது குறித்து மாநில முதல்வர்; தமிழக வன பாதுகாவலர்; மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,''என்றார்.
நகராட்சி இடத்தில் அனுமதி இல்லை
குன்னுார் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி கூறுகையில்,''டைடல் பார்க் திட்டத்திற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியின், 300 ஏக்கர் நிலம் இதன் அருகில் உள்ளது. அங்கு சோலை மரங்கள்; நீராதாரங்கள் இருப்பதால் நகராட்சி இடத்தில் எந்த திட்டங்களுக்கும் அனுமதி அளிக்க முடியாது,'' என்றார்.
கட்டபெட்டு ரேஞ்சர் செல்வகுமார் கூறுகையில்,''அரசு திட்டம் கொண்டு வரப்படும் இடம் வனத்துறையின் இடமில்லை.
எனினும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் மற்றும் தவிட்டு பழ செடிகள், அந்த இடத்தில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு தெரிவிக்கப்படும். சோலைகள் அழிவுக்கு வனத்துறை அனுமதி கொடுக்காது,'' என்றனர்.

