/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு காட்சி முனையில் மூலிகை தோட்டம் வருமா?
/
கோடநாடு காட்சி முனையில் மூலிகை தோட்டம் வருமா?
ADDED : ஜூலை 14, 2025 08:53 PM
கோத்தகிரி; கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில், மூலிகை தோட்டம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றான, கோத்தகிரி கோடநாடு காட்சிமுனை உள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மையத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தில் இருந்து காணும்போது, தெங்குமரஹாடா அழகிய கிராமம், வளைந்து நெளிந்து செல்லும் மாயாற்றின் அழகு, மேடநாடு காட்சிமுனை ஆகியவை பார்வையாளர்களில் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
இப்பகுதியில் பாதுகாப்பு கருதி, கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாறை ஓரத்திற்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டுக்களிக்க முடியும். கீழ் பகுதியில் அரை ஏக்கர் பரப்பளவிலான நிலம் வெறுமனே விடப்பட்டுள்ளது.
இங்கு, சிறுவர்கள் விளையாட ஏதுவாக, விளையாட்டு அம்சங்களுடன் மூலிகை தோட்டம் அமைக்க நடவடிக்கை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், தோட்டம் அமைக்கும் பணி கைவிடப்பட்டது.
இதனால், அந்த குறிப்பிட்ட நிலம், தற்போது பயனற்று கிடக்கிறது. இங்கு, அரியவகை மூலிகை தோட்டம் அமைக்கும் பட்சத்தில், பார்வையார்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், அழிந்து வரும் மூலிகை செடிகள் பாதுகாக்கப்படும். எனவே, வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.