/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மக்களுக்கு பயனில்லாத மலை ரயில் மாற்றம் வருமா...?மாணவர்களுக்கும் சிறப்பு சலுகை அவசியம்
/
நீலகிரி மக்களுக்கு பயனில்லாத மலை ரயில் மாற்றம் வருமா...?மாணவர்களுக்கும் சிறப்பு சலுகை அவசியம்
நீலகிரி மக்களுக்கு பயனில்லாத மலை ரயில் மாற்றம் வருமா...?மாணவர்களுக்கும் சிறப்பு சலுகை அவசியம்
நீலகிரி மக்களுக்கு பயனில்லாத மலை ரயில் மாற்றம் வருமா...?மாணவர்களுக்கும் சிறப்பு சலுகை அவசியம்
ADDED : ஏப் 27, 2024 12:29 AM

குன்னுார்:'நீலகிரி மலை ரயிலில் உள்ளூர் பயணிகள் மற்றும் மாணவ, மாணவியருக்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பு சலுகை திட்டம் செயல் படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை, யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது,அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பழமையான மலை ரயில் நிலையங்கள் பொலிவு படுத்தப்பட்டு வருகிறது.
ரயில் பாதைகள் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மலை ரயிலுக்காக புதிதாக நிலக்கரி, டீசல் இன்ஜின்கள், 27 பெட்டிகள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
அதில், நிலக்கரி இன்ஜின், 20 க்கும் மேற்பட்ட பெட்டிகள் மேட்டுப்பாளையத்தில் பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
வரும், 29ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை, வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கள் கிழமை வரை, 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஊட்டி- குன்னுாருக்கு ஆறு முறை
இந்த ரயில், குன்னுார்-- ஊட்டி இடையே காலை, 7:45 மணி, பகல், 12:35 மணி, மாலை 4:00 மணி; ஊட்டி-- குன்னுார் இடையே காலை, 9:00 மணி, பகல், 12:10 மணி, மாலை, 5:30 மணிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரயில், குன்னுாரில் இருந்து கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து, 5 பெட்டிகளுடன் காலை, 10:40 மணிக்கு ஊட்டிக்கு செல்கிறது. ஊட்டியில் இருந்து மதியம், 2:10 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயிலில், குன்னுார் வரை, 5 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
அதில், ஊட்டி- குன்னுார் இடையே முதல் வகுப்பு கட்டணம், 280; 2ம் வகுப்பு கட்டணம், 70 ரூபாய் எனவும் வசூலிக்கப்படுகிறது. சீசனையொட்டி தற்போது கூடுதல் சிறப்பு மலை ரயில்களும் இயக்கப்படுகிறது.
உள்ளூர் மக்கள்ஏமாற்றம்
எனினும், உள்ளூர் மக்களுக்கு இந்த ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலை ரயிலில், 2ம் வகுப்பு கட்டணம் 10 ரூபாய் என இருந்தது. ஆனால், தற்போது, 70 ரூபாய் என பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜ் கூறுகையில், ''கடந்த காலங்களில் குறைந்த கட்டணம் இருந்ததால் பணிக்கு செல்பவர்கள், கல்லுாரி, ஐ.டி.ஐ., மாணவ, மாணவியர் மலை ரயிலில் பயணம் செய்தனர்.
மேலும், மாதம் ஒரு முறை பணம் செலுத்தி சீசன் டிக்கெட் பெற்று உள்ளூர் மக்கள் பயன் பெற்று வந்தனர்.
ஆனால், தற்போது உள்ளூர் மக்கள் செல்ல முடியாத அளவிற்கு பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது.
உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையிலும், நீலகிரியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் செல்ல சிறப்பு சலுகை திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். இது குறித்து பல முறை ரயில்வே அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் பயனில்லை.'' என்றார்.

