UPDATED : நவ 26, 2026 07:32 PM
ADDED : நவ 26, 2026 07:32 PM
ஊட்டி:
அரசு கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக, ஊரகப்பகுதி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில்,வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், 100 சதவீதம் மானியத்தில் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்படுகிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், 30 ஆயிரம் மதிப்புள்ள, 5 செம்மறி ஆடு, வெள்ளாடுகள், (1 கிடா, 4 பெண் ஆடுகள் அல்லது 5 பெண் ஆடுகள்) வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் காப்பீடு, ஆடுகளை வீட்டிற்கு கொண்டு செல்ல போக்குவரத்து மற்றும் உடனடி தீவன செலவுக்காக, 2,500 ரூபாய் வழங்கப்படும். உரிய முறையில் வளர்ப்பவர்களுக்கு, ஓரு ஆண்டுக்கு பிறகு, 2,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில், 18 முதல் 60 வயத்திற்கு உட்பட்ட, ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநர்கள், மாற்றுத்திறனாளி மகளிர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறன் உடைய குடும்ப உறுப்பினர்களை கொண்ட மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
மாவட்டத்தில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் செயல்படும், ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் நடப்பு ஆண்டில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றியங்கள் குறித்த தகவல்களை, https://nilgiris.nic.in மற்றும் www.ahdtn.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
விண்ணப்பிக்க தெரியாதவர்கள், ஊட்டி கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குனர் அலுவலகம், கூடலுார் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ஸ்ரீ மதுரை, மசினகுடி, முதுமலை, நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு பஞ்சாயத்து அலுவலகங்களை அணுகி, டிச.,12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
