/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 81 கோடியில் லவ்டேல் - பிங்கர்போஸ்ட் மாற்றுப்பாதை புத்தாண்டில் பணி துவக்கம்!
/
ரூ. 81 கோடியில் லவ்டேல் - பிங்கர்போஸ்ட் மாற்றுப்பாதை புத்தாண்டில் பணி துவக்கம்!
ரூ. 81 கோடியில் லவ்டேல் - பிங்கர்போஸ்ட் மாற்றுப்பாதை புத்தாண்டில் பணி துவக்கம்!
ரூ. 81 கோடியில் லவ்டேல் - பிங்கர்போஸ்ட் மாற்றுப்பாதை புத்தாண்டில் பணி துவக்கம்!
ADDED : டிச 23, 2024 05:21 AM

ஊட்டி: ஊட்டி லவ்டேல் பகுதியில் இருந்து பிங்கர்போஸ்ட் வரை செல்ல, மாற்று பாதை அமைக்க, 81 கோடி ரூபாய் ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டுள்ளது; புத்தாண்டில் பணிகளை தொடங்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை பார்வையிடவும், கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடு மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
ஊட்டியில் ஆண்டு தோறும் ஏப்., மே மாதங்களில் கோடை சீசன்; செப்,, அக்,, மாதங்களில், 2-வது சீசனும் களை கட்டுவது வழக்கம். ஆண்டுக்கு, 35 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அதில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மேட்டுப்பாளையம் வந்து அதன் பின், கோத்தகிரி சாலை அல்லது குன்னுார் சாலை வழியாக ஊட்டிக்கு வருகின்றனர்.
குறிப்பாக, கோடை சீசன் காலங்களில், அந்த, 2 சாலைகள் மற்றும் ஊட்டி நகர் பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதேபோல், பருவமழை காலங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.
தனியார் வாகனங்களுக்கு மாற்று பாதை
இதையடுத்து, சுற்றுலா பயணிகள், ஊட்டி வருவதற்கு ஏதுவாக, கெத்தை--மஞ்சூர் வழியாக, 3-வது மாற்றுப்பாதை உருவாக்கப்பட்டது. எனினும் இந்த சாலையில் காப்பு காடு வழியாக, இரவு நேரங்களில் செல்ல அனுமதி கிடையாது. இதனால், தனியார் வாகனங்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் அருகே, காட்டேரி வந்த பின், குன்னுார் நகருக்குள் செல்லாமல், காட்டேரியிலிருந்து, கேத்தி-பாலாடா, காந்திநகர், லவ்டேல் சந்திப்பு வழியாக ஊட்டிக்கு வர, 4-வது மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ. 81 கோடி நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், குன்னுாரில் இருந்து வரும் போது, ஊட்டி நகருக்குள் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க நெடுஞ்சாலை துறை சார்பில் உள்ளூரில் மாற்று பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறியதாவது:
மேட்டுப்பாளையம்-- குன்னுார் சாலை வழியாக, ஊட்டிக்கு வரும் வாகனங்கள் நேரடியாக, கூடலுார், கேரளா, கர்நாடகா செல்வதற்கு, ஊட்டி நகருக்குள் வந்து செல்ல வேண்டும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் அவதிப்படுகின்றனர்.
இத்தகைய வாகனங்கள் ஊட்டி நகருக்குள் செல்லாமல், கூடலுார், கேரளா, கர்நாடகா செல்வதற்கு வசதியாக, ஊட்டியின் நுழைவு வாயில் பகுதியான, லவ்டேல் சந்திப்பில் இருந்து மஞ்சனக்கொரை- பாலாடா சந்திப்பு, பர்ன்ஹில் சாலை வழியாக, பிங்கர்போஸ்ட் வரை செல்ல மாற்று பாதை திட்டம் தயார்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 81 கோடி ரூபாய் நிதியில், 10 கி,மீ., துாரம் மாற்றுப்பாதை அமைக்கப்பட உள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
புத்தாண்டில் சாலை பணிகள் தொடங்கப்படும். ஏற்கனவே உள்ள சிறிய சாலை,7 மீட்டர் வரை அகலப்படுத்தப்படும். 10 கி.மீ., சாலையில், 25 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளது. சீசனுக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இதனால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்,'' என்றார்.