ADDED : அக் 02, 2025 12:23 AM

பந்தலுார்; பந்தலுார் அருகே, ராக்வுட் பகுதியில் ஆட்டோவில் வந்த, எஸ்டேட் தொழிலாளியை யானை தாக்கி கொன்றதால் மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே நெலாக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் ஒரு ஆண் யானை நேற்று முன்தினம் இரவு நெலாக்கோட்டை அருகே ராக்வுட் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருந்துள்ளது.
அங்குள்ள எஸ்டேட் தொழிலாளி ராஜேஷ்,48, என்பவர் நெலாக்கோட்டை பஜாரில் பூஜை பொருட்களை வாங்கி, கொண்டு மனைவி கங்காவுடன் ஆட்டோவில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் அருகே வந்தபோது சாலையில் யானை நின்றிருந்தது.
யானையை பார்த்த கணவன், மனைவி மற்றும் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆகியோர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடியுள்ளனர். அப்போது துரத்தி சென்ற யானை ராஜேசை தாக்கியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். யானை ஆட்டோவையும் சேதப்படுத்தியது. அங்கு வந்த வனத்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்ல முயன்றனர். பொதுமக்கள் இறந்தவர் உடலுடன் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., வசந்தகுமார் உட்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். நள்ளிரவு, 11-:30 மணிக்கு உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
காலையில் முற்றுகை போராட்டம் தொடர்ந்து, நேற்று காலை, ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு, சாலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு, எம்.எல்.ஏ., ஜெயசீலன், ஆர்.டி.ஓ. குணசேகரன், டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் சிராஜுநிஷா ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு நடத்தினர்.
அப்போது பேசிய பொதுமக்கள்,' உயிரிழந்தவரின் மனைவிக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும்; மனிதர்களைதாக்கும் யானையை பிடித்து செல்ல வேண்டும்; போதிய தெருவிளக்கு அமைக்க வேண்டும், கூடுதல் வன பணியாளர்களை கண்காணிப்பு பணியில் நியமிக்க வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்,'மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள், மதியம் போராட்டத்தை கைவிட்டனர். அப்பகுதியில் போலீசார்; வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.