/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலக அயோடின் தினம்: விழிப்புணர்வு உறுதிமொழி
/
உலக அயோடின் தினம்: விழிப்புணர்வு உறுதிமொழி
ADDED : அக் 21, 2024 11:16 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளியில், உலக அயோடின் தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பந்தலுார் அருகே அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு இணைந்து நடத்திய, உலக அயோடின் தின நிகழ்ச்சியில் ஆசிரியர் ரகுபதி வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மணியம்மாள் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் பங்கேற்று பேசுகையில், ''ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் பல்வேறு நோய்களை தவிர்க்கும் வகையில், அயோடின் உப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், உலக அயோடின் தினம் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்கள் பாடங்களை சிறப்பாக கவனிக்கவும், கவனித்த பாடங்களை மனதில் பதிய வைக்கவும் நினைவாற்றல் முக்கியத்துவம் வாய்ந்தது. நினைவாற்றலை அதிகரித்து, முன் கழலை கழுத்து நோய் மற்றும் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை, தவிர்க்கும் திறன் கொண்ட அயோடின் கலந்த உப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்,'' என்றார்.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''தற்போது பல்வேறு பெயர்களில் உப்புகள் விற்பனை செய்யப்பட்டபோதும், அதில் அயோடின்அளவு எந்த அளவு உள்ளது என்பதை சரி பார்த்து வாங்குவது அவசியம் ஆகும். அரசு ரேஷன் கடைகளில் அயோடின் கலந்த தரமான உப்பு வினியோகம் செய்து வரும் நிலையில், இவற்றை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துவது முக்கியம்,'' என்றார்.
'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகி ராஜா மற்றும் பூபதி உட்பட பலர் பேசினர். தொடர்ந்து, அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது குறித்து மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் பரணிதரன், செவிலியர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் பிரமிளா நன்றி கூறினார்.