ADDED : டிச 09, 2024 04:41 AM
கோத்தகிரி : கோத்தகிரி கூக்கல் தொறை கிராமத்தில், உலக மண்வள தின விழா நடந்தது.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி தலைமை வகித்தார். கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, தோட்டக்கலை துறை மூலம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
ஊட்டி தோட்டக்கலை மண்ணாய்வு கூட உதவி இயக்குனர் அனிதா, 'மண் ஆய்வு செய்வதன் அவசியம் குறித்தும், மண் வளத்தின் முக்கியத்துவம்,' குறித்தும் எடுத்துரைத்தார். துணை தோட்டக்கலை துறை அலுவலர் சந்திரன், 'அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், மண் வளத்தின் பங்கு குறித்து,' விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, மண் ஆய்வு கூடம் மூலம், மண்வளம் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மண் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் உப்பின் நிலை அறியும் கருவி நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, விவசாயிகளுக்கு மண்வள அட்டை, இன கவர்ச்சி பொறி, டாலமைட் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட்டன.
மண்ணாய்வு கூட வேளாண்மை அலுவலர் நிர்மலா, மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார். இதில், கூக்கல் தொறை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.