/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலக ஈர நிலங்கள் தினம்; மாணவர்கள் பேரணி
/
உலக ஈர நிலங்கள் தினம்; மாணவர்கள் பேரணி
ADDED : ஜன 25, 2024 12:08 AM

பெ.நா.பாளையம் : உலக ஈர நிலங்கள் தினத்தையொட்டி, துடியலூர் அருகே அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் பேரணி நடந்தது.
சென்னை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, சுற்றுச்சூழல் கல்வி திட்டம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், கோவை தேசிய பசுமை படை ஆகியவை இணைந்து உலக ஈர நிலங்கள் தினத்தை கடைபிடித்து வருகின்றன.
ஈர நிலங்கள் என்பது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீரினால் மூடப்பட்ட நிலங்களாகும். இவை, பல்லுயிர் பராமரிப்புக்கான இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் நிலங்களாகவே காணப்படுகின்றன. ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்து, உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், பிப்., 2ம் தேதி உலக ஈர நிலங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் 2,453 பகுதிகள் ஈர நிலங்களாக யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அதில், இந்தியாவில், 75 தளங்கள் உள்ளன.
ஈர நிலங்களால், பல்வேறு நன்மைகள் உள்ளன. குறிப்பாக, நிலத்தடி நீரை பெருக்குகின்றன. இயற்கை நீர் வடிகட்டிகளாக செயல்பட்டு, மாசுக்களை அகற்றுகின்றன. புவி வெப்பமாதலை குறைக்கிறது. மண் அரிப்பை தடுக்கிறது. பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ வழி வகுக்கின்றன. ஈர நிலங்கள் பொழுதுபோக்கு தளங்களாகவும் உள்ளன. ஈர நிலங்கள் அழிவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றன. சதுப்பு நில தாவரங்கள் அழிகின்றன. பவளப்பாறைகள் அழிவுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது.
இதையொட்டி, அசோக புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், உலக ஈர தினத்தின் முக்கியத்துவம் கொண்ட கருத்துக்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில், அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, பள்ளி தேசிய பசுமை படை ஆசிரியர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.