தி.மு.க.,வுக்கு எதிராக 108 தேங்காய் உடைத்து வழிபாடு
தி.மு.க.,வுக்கு எதிராக 108 தேங்காய் உடைத்து வழிபாடு
ADDED : ஏப் 14, 2026 10:42 PM

குன்னுார்: தமிழகத்தில் இடிக்கப்பட்ட, 200 க்கும் மேற்பட்ட கோவில்களை கட்டவும், தி.மு.க.,வுக்கு எதிராக மக்கள் பாடம் புகட்ட வலியுறுத்தியும், இந்து முன்னணியினர், தந்தி மாரியம்மன் தேர் ஊர்வலத்தில் 108 தேங்காய்கள் உடைத்து வழிபாடு நடத்தினர்.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நேற்று நடந்தது. தேர் வடம் பிடித்தவுடன், இந்து முன்னணியினர் அம்மனை வழிபட்டு, தேரின் முன்பு, 108 தேங்காய்களை உடைத்தனர்.
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ''தமிழகத்தில் கடந்த, 5 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில், 200 க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்ப்பட்டன. இந்த தேர்தலில் தி.மு.க, விற்கு பாடம் புகட்டும் வகையிலும், கோவில்களை இடித்த தி.மு.க., விற்கு பக்தர்கள் ஓட்டளிக்க கூடாது எனவும் வலியுறுத்தி தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இடிக்கப்பட்ட கோவில்களை மீண்டும் கட்ட வழிபாடு நடத்தப்பட்டது,'' என்றார்.
