ADDED : ஏப் 24, 2026 06:48 PM

குன்னுார்: குன்னுாரில் ஒரு காலத்தில் துர்நாற்றம் வீசிய குப்பைமேடு, நகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்பின் கூட்டு முயற்சியால், இன்று வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் அழகிய பூங்காவாக மாறியுள்ளது.
குன்னுார் நகராட்சி, 30 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் ஓட்டுப்பட்டறை அருகே குப்பை குழியில் கொட்டப்படுகின்றன. நகராட்சி ஒத்துழைப்புடன், 'கிளீன் குன்னுார்' அமைப்பு, பிளாஸ்டிக் உட்பட மட்கும், மட்காத குப்பைகளை பிரித்து, மறுசுழற்சி பணிகளை, 7 ஆண்டிற்கு முன்பு துவக்கியது. இறைச்சி, காய்கறி, உணவு கழிவுகள் கொண்ட மட்கும் குப்பைகளில் , இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத குப்பை கழிவுகளில் 'பைரோலிசிஸ்' எனப்படும் 'பர்னஸ்' எண்ணெய் எடுக்கவும் சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாக பயன்படுத்தவும் அனுப்பப்படுகிறது.
மறுப்புறம், துர்நாற்றம் வீசிய இந்த இடத்தில் கடந்த, 2019ல், பூங்காவை இந்த அமைப்பு உருவாக்கியது. நடப்பாண்டின் சீசனுக்காக, கடந்த பிப்., மாதத்தில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது, 'நான்கு வகையான மெரி கோல்டு, பேன்சி, லுாபின், ஜின்னியா லில்லியம், பிளாக்ஸ்,' உள்ளிட்ட மலர்கள் பூத்து பூங்காவை வண்ணமயமாக மாற்றி உள்ளது. குப்பை கழிவுகளின் இயற்கை உரம், மலர் செடிகளுக்கு அதிக நுண்ணுாட்ட சத்து கிடைப்பதும் வண்ணங்கள் கூடுதலாக இருப்பதும் இதன் சிறப்பு அம்சம்.
துர்நாற்றம் வீசிய இடம் தற்போது மலர்களின் நறுமணம் வீசுவதோடு வண்ண பட்டாம்பூச்சிகளும் வட்டமடிக்கும் இடமாகவும் மாறியுள்ளது.
கிளீன் குன்னுார் அமைப்பின் செயலாளர் வசந்தன் கூறுகையில்,''மலர் கண்காட்சியில், மாவட்ட அளவிலான பூங்கா போட்டிகளில், கடந்த, 4 ஆண்டுகளாக பல்வேறு பரிசுகளை இந்த பூங்கா பெற்றுள்ளது,'' என்றார்.
