ADDED : மே 07, 2025 01:57 AM
மஞ்சூர் : மஞ்சூர் அருகே, வழி விடுமாறு கூறிய அரசு பஸ் டிரைவரை தாக்கிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
மஞ்சூர் கொட்டரக்கண்டி பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ராஜ்குமார்,55. ஊட்டி-கெத்தை இடையே இயக்கப்படும் அரசு பஸ் டிரைவராக பணிபுரிகிறார். இந்நிலையில்,நேற்று முன்தினம் மதியம்,12:30 மணிக்கு மஞ்சூரிலிருந்து ஊட்டிக்கு பஸ் வந்தது.
வழியில், தேவர்சோலை பகுதிக்கு வந்து, பயணிகளை ஏற்றிய பின் பஸ் புறப்பட்டு, 20 மீட்டர் துாரம் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே வந்த போது, மது வகைகளை வாங்க வந்த மது பிரியர்கள் சாலையின் இருப்புறம் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தியிருந்ததால், குறிப்பிட்ட பகுதியை கடந்து செல்ல முடியவில்லை.
அப்போது , சாலையில் கார் ஒன்று இடைஞ்சலாக நின்றிருந்தது. கார் அருகே மது போதையில் நின்றிருந்த வாலிபரை தள்ளி நிற்குமாறு டிரைவர் கூறியுள்ளார். போதை தலைக்கேறிய வாலிபர் திடீரென டிரைவரை நோக்கி வந்து சரமாரியாக தாக்கி தப்பியோடினர்.
பஸ் டிரைவர் ராஜ்குமார், ஊட்டி ரூரல் போலீசில் புகார் அளித்தார்.
ரூரல் டி.எஸ்.பி., உத்தரவின் பேரில், ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதிகரட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி டிரைவர் பிரவீன்குமார், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.