ADDED : ஜன 21, 2025 05:58 AM

வால்பாறை: வால்பாறை அருகே, குடிபோதையில் மூதாட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள லோயர்பாரளை எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்டேட் தொழிலாளி சரோஜினி,72. கோவையில் மகன் வீட்டில் வசித்த இவர், மாதம் தோறும் ஓய்வூதியம் பெறுவதற்காக லோயர்பாரளை எஸ்டேட்டிற்கு வருவது வழக்கம். கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பொங்கல் பண்டிகைக்காக வந்தவர், வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
கடந்த, 18ம் மாலை, 5:00 மணிக்கு, பக்கத்து வீட்டினர், அங்கு ரத்தக்கரை இருப்பதையும், வீட்டினுள் முனங்கல் சப்தம் கேட்பதாகவும் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். வால்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, உடலில் காயங்களுடன், மூதாட்டி இறந்து கிடந்தார்.
இந்நிலையில், மூதாட்டியை கொலை செய்ததாக, அதே எஸ்டேட் பகுதியை சேர்ந்த, காட்டப்பன் மகன் ரங்கராஜன், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
சம்பவம் நடந்த அன்று, மூதாட்டியின் வீட்டிற்கு, அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் குடிபோதையில் சென்றுள்ளார். வீட்டின் முன்பாக இருந்த குச்சிகளை வெட்டுவதாக கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கையில் வைத்திருந்த அரிவாளால், மூதாட்டியின் தலையில் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிழே விழுந்த அவரை, வீட்டிற்குள் இழுத்து சென்று, கதவை பூட்டி விட்டு, வீட்டின் பின் பக்க வழியாக சென்று விட்டார். போலீஸ் மோப்ப நாயின் உதவியால் குற்றவாளியை எளிதில் கண்டறிந்தோம். கைது செய்யப்பட்ட ரங்கராஜன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு, கூறினர்.

