ADDED : செப் 12, 2025 08:10 PM
ஊட்டி ;ஊட்டி அரசு கலைக்கல்லுாரிக்கு அரிவாளுடன் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில், 10 நாட்களுக்கு முன் தமிழ் துறை இரண்டாம் ஆண்டு படித்து வந்த இரு மாணவ குழுக்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறில், பாதிக்கப்பட்ட ஒரு மாணவருக்கு ஆதரவாக காந்தள் பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், 10 நபர்களுடன் கல்லுாரிக்கு வந்து, மதுரை மாவட்டத்தை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரிடம் தகராறு செய்துள்ளார்.
பயந்து போன அந்த மாணவர், ஊட்டியில் உள்ள பெயின்டரான தனது சகோதரனிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவனின் சகோதரர் அரிவாளுடன் கல்லுாரிக்கு வந்துள்ளார். இதை பார்த்த மாணவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரை பார்த்ததும் அரிவாளுடன் வந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து, ஊட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அரிவாளுடன் கல்லுாரிக்கு வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரன்,26, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.