/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஜிப் லைன் ஹேங்கிங்' சாகச சுற்றுலா
/
'ஜிப் லைன் ஹேங்கிங்' சாகச சுற்றுலா
ADDED : ஜன 11, 2024 09:59 PM

கூடலுார்;கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், அமைக்கப்பட்டுள்ள, 'ஜிப் லைன் ஹேங்கிங்' (கம்பியில் தொங்கியப்படி) சாகச சுற்றுலா அடுத்த மாதம் துவங்க உள்ளது.
கூடலுார் நாடுகாணியில் அமைந்துள்ள ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ், 1.7 கோடி ரூபாய் நிதி மூலம், சுற்றுலா சார்ந்த உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு, பயன்பாட்டில் உள்ள பழைய கட்டடங்கள் சீரமைப்பு, உட்கட்டமைப்பு பணிகள், காட்சி கோபுரம் பெரிதாக விரிவுபடுத்தல், பார்கிங் வசதி, சூழல் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, 22 லட்சம் ரூபாயில், கம்பியில் தொங்கியப்படி பயணிக்கும் சாகச சுற்றுலாவுக்கான, 'ஜிப் லைன் ஹேங்கிங்' அமைத்துள்ளனர். அதில், பல கட்ட சோதனைக்கு பின், நேற்று இறுதி கட்ட சோதனை பணி நடந்தது. அதன் நிகழ்ச்சி, வனச்சரகர் வீரமணி தலைமையில் நடந்தது. அங்கு பூஜை செய்து, சோதனை முறையில் சாகச சுற்றுலாவை துவக்கினர். முதற்கட்டமாக வனத்துறையினர் இந்த சாகச முயற்சியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'ஜிப் லைன் ஹேங்கிங்' சாகச சுற்றுலா சோதனை முறையில் துவங்கி உள்ளோம். இதன் மொத்த நீளம், 550 மீட்டர் ஆகும். நபருக்கு கட்டணமாக, 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். இப்பணியில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் முதல் முழுமையாக செயல்படும்,' என்றனர்.