/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பெரம்பலுார் நீதிமன்றத்தில் பெண் தற்கொலை முயற்சி
/
பெரம்பலுார் நீதிமன்றத்தில் பெண் தற்கொலை முயற்சி
ADDED : மே 04, 2024 01:28 AM
பெரம்பலுார்:-பெரம்பலுார் மாவட்டம், வயலுார் கிராமத்தை சேர்ந்த தம்பதி வெள்ளிவேல், 40, தனலட்சுமி, 36. இவர்களுக்கு பரத், 18, தர்ஷினி, 17, ஆர்த்திகா, 13, ஆதி சக்தி, 5, என, நான்கு குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழும் நிலையில், வெள்ளிவேல் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
கணவர் வெள்ளிவேலுவும், மாமனார் துரைசாமியும் தன்னை அடித்து கொடுமை படுத்தியதாக அளித்த புகாரின்படி, மாவட்ட சமூக நலத்துறையால், பெரம்பலுார் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில், 2023 ஜூலை 11 முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வெள்ளிவேலும், அவரது தந்தை துரைசாமியும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், தொடர்ந்து வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வருவதால் தனலட்சுமி விரக்தி அடைந்தார்.
நேற்று, விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, பெரம்பலுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கழிப்பறைக்கு சென்று எறும்பு பவுடரை கலந்து குடித்து, தனலட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அங்கிருந்தவர்கள், அவரை பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பெரம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.