/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
சிறப்பாக பணியாற்றியதாக ஊழல் அதிகாரிக்கு சான்றிதழ்
/
சிறப்பாக பணியாற்றியதாக ஊழல் அதிகாரிக்கு சான்றிதழ்
ADDED : பிப் 09, 2024 02:02 AM
பூலாம்பாடி:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடி மின் வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றுபவர் பாரதி, 38, இவர், பொதுமக்களிடம் லஞ்சம் பெற்று, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஆறு மாதங்களுக்கு முன், சென்னை மின் வாரிய லஞ்ச ஒழிப்பு டி.ஜி.பி.,க்கு புகார் சென்றது.
தொடர்ந்து, சென்னை மின் வாரிய லஞ்ச ஒழிப்பு டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள், பூலாம்பாடிக்கு வந்து விசாரித்தனர். புகார்கள் அனைத்தும் உண்மை என தெரிந்தது.
இதை தொடர்ந்து, லஞ்சம் பெற வாய்ப்பில்லாத, பெரம்பலுார் - துறைமங்கலம் நான்கு சாலை பகுதியில் உள்ள மின் தடை புகார் மையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அதன் பிறகும், பூலாம்பாடி மின் வாரிய உதவி மின் பொறியாளராக பாரதி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், உதவி மின் பொறியாளர் பாரதி சிறப்பாக பணியாற்றியதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் சில நாட்களுக்கு முன் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நேர்மையான அதிகாரிகள், 'ஊழலில் திளைத்த அதிகாரிக்கு நற்சான்றிதழ் நியாயமா...' என, 'வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

