/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
கொம்பு இழந்த மான் பெரம்பலுாரில் பரபரப்பு
/
கொம்பு இழந்த மான் பெரம்பலுாரில் பரபரப்பு
ADDED : அக் 19, 2024 09:58 PM

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர், நேற்று காலை வீட்டில் இருந்தபோது, கொம்புகள் அறுக்கப்பட்ட நிலையில் மான் ஒன்று மிரட்சியுடன் இவரது வீட்டிற்குள் புகுந்து பதுங்கியுள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவர், தன் தெருவில் வசிப்பவர்களின் உதவியுடன் அதை பிடித்து பத்திரமாக கட்டி வைத்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். கொம்புகளின்றி காயமடைந்திருந்த மானை, வனத்துறையினர் மீட்டு கால்நடை டாக்டர்கள் வாயிலாக சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.
காயமடைந்த மானின் தலைப்பகுதியிலுள்ள கொம்புகள் இரண்டும் பிசிறுகள் ஏதுமின்றி சம அளவில் துல்லியமாக அறுக்கப்பட்டிருந்ததோடு, ரத்தம் வழிய வனப்பகுதியில் இருந்து தப்பி வந்துள்ளதால், வனவிலங்கை வேட்டையாடும் கும்பல், கொம்புகளை துண்டித்திருக்கலாம் என, கூறப்படுகிறது. அதே சமயம், மற்றொரு மானுடன் சண்டையிட்டு அல்லது மரத்தின் இடுக்குகளில் சிக்கி, கொம்பு உடைந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
பெரம்பலுார் மாவட்டத்தில் மான்கள், தொடர்ந்து மர்ம கும்பல்களால் வேட்டையாடப்படும் நிலையில் அதை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வனத்துறையினர் அலட்சியமாக இருப்பதாக, வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.