/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பல் இளிக்கும் பெரம்பலுார் - மானாமதுரை நெடுஞ்சாலை; சுங்கச்சாவடியை மீண்டும் துவக்கி, பராமரிக்க கோரிக்கை
/
பல் இளிக்கும் பெரம்பலுார் - மானாமதுரை நெடுஞ்சாலை; சுங்கச்சாவடியை மீண்டும் துவக்கி, பராமரிக்க கோரிக்கை
பல் இளிக்கும் பெரம்பலுார் - மானாமதுரை நெடுஞ்சாலை; சுங்கச்சாவடியை மீண்டும் துவக்கி, பராமரிக்க கோரிக்கை
பல் இளிக்கும் பெரம்பலுார் - மானாமதுரை நெடுஞ்சாலை; சுங்கச்சாவடியை மீண்டும் துவக்கி, பராமரிக்க கோரிக்கை
ADDED : ஏப் 02, 2025 05:44 AM

பெரம்பலுார் : குண்டும், குழியுமாக பல் இளிக்கும் பெரம்பலுார் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையை சீரமைப்பதுடன், இச்சாலையில் பேரளியில் மூடப்பட்ட சுங்கச்சாவடியை திறந்து, சாலையை பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலுாரில் துவங்கி பேரளி, அரியலுார், திருவையாறு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்துார், சிவகங்கை மற்றும் மானாமதுரை வரை, 212 கி.மீ., துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையை (என்.எச்.226) விரிவாக்கம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது.
சாலை விரிவாக்கத்தின்போது, எந்த நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. இந்த சாலையின் இருபுறமும் வாகனம் செல்லும் அளவிற்கு ரோடு புதிதாக உருவாக்கப்பட்டது. பின், ஏற்கனவே உள்ள சாலையில் தார் சாலை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, பெரம்பலுார் - அரியலுார் சாலையை, ஆத்துார் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைத்து, நெடுஞ்சாலை எண்.136 என மாற்றப்பட்டது. கடந்த 2007ல் இந்த தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்தது.
இச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, பெரம்பலுார் மாவட்டம், பேரளி கிராமம் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. எனினும் நில பிரச்னை, வழக்கு போன்ற காரணங்களால் 4 ஆண்டுகளாக செயல்படாததால், அவ்வழியாக வாகனங்கள் கட்டணமின்றி சென்றன.
இந்நிலையில், 2021 ஜூலை 24ம் தேதி பேரளி சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால், சாலை பணி முழுவதுமாக நிறைவு பெறாமலும், போதிய அளவு விரிவுபடுத்தாமலும், சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என, நாம் தமிழர் கட்சி மற்றும் பேரளி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, திறக்கப்பட்ட அடுத்த மாதமே ஆகஸ்ட் 5ம் தேதி சுங்கச்சாவடி மூடப்பட்டது.
இந்த தேசிய நெடுஞ்சாலையை, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அரியலுாரில் செயல்படும் அரசு மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகளுக்கு ஏராளமான லாரிகள் மூலப்பொருட்களை ஏற்றிச் செல்கின்றன. கருங்கல், ஜல்லி, மணல் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளும் இச்சாலையை பயன்படுத்துகின்றன.
இச்சாலையில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி செல்வதால், பெரம்பலுார் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் நான்கு ரோடு சந்திப்பு, அரியலுார் முன்பாக உள்ள அல்லிநகரம் வரை சாலை குண்டும் குழியுமாகவும், மேடு பள்ளமாகவும் காணப்படுகிறது.
சாலை நாளுக்கு நாள் மோசமாக மாறி வருகிறது. பல இடங்களில் சாலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சாலை சமமாக இல்லை.
சில இடங்களில் சாலையில் விரிசல் ஏற்பட்டு வெடித்துள்ளது. தார் சாலையில் மேடு, பள்ளங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள், இந்த சாலையில் செல்லும்போது மிகவும் சிரமப்படுகின்றனர்.
சுங்கச்சாவடி இல்லாததால் இச்சாலை பராமரிப்பின்றி உள்ளது. எனவே, இச்சாலையை சீரமைத்து, பேரளி கிராமத்தில் மூடப்பட்ட சுங்கச்சாவடியை மீண்டும் திறக்க வேண்டும். அதன் மூலம் சாலையை பராமரித்து, வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

