/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
மான் கறி என நாய்க்கறி விற்பனை பெரம்பலுாரில் மூவர் கைது
/
மான் கறி என நாய்க்கறி விற்பனை பெரம்பலுாரில் மூவர் கைது
மான் கறி என நாய்க்கறி விற்பனை பெரம்பலுாரில் மூவர் கைது
மான் கறி என நாய்க்கறி விற்பனை பெரம்பலுாரில் மூவர் கைது
ADDED : செப் 05, 2025 01:21 AM

பெரம்பலுார்:பெரம்பலுாரில், மான் கறி எனக்கூறி நாய்க்கறி விற்பனை செய்ததாக, மூன்று பேரை, வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகளில், ஒரு கும்பல், மான் மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதாக, மாவட்ட வன அலுவலர் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்தது.
வனச்சரக அலுவலர் சுதாகர் தலைமையில், வனக்காப்பாளர்கள் வேப்பந்தட்டை தாலுகா, அரசலுார் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் காட்டு கொட்டகையில் சோதனை செய்தனர்.
அங்கு, அலெக்சாண்டர், தனசிங், ஜான் ஜோசப் ஆகியோர் வேட்டை நாய்களை கொண்டு, வனப்பகுதிகளில் இரண்டு புள்ளி மான்கள் மற்றும் ஒரு காட்டு பன்றியை வேட்டையாடி, இறைச்சியாக்கி விற்பனைக்கு வைத்திருந்தனர்.
அவர்களை கைது செய்த வனத்துறையினர், இறைச்சி, இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்த வனத்துறையினர், தலா 1.50 லட்சம் வீதம், 4.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
திருவிழா காலங்களில், அசைவ பிரியர்களுக்காக, மூன்று பேரும் சேர்ந்து, வனப்பகுதியில் மான் மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாடி உள்ளனர். மான் கறி கிலோ 350 -- 600 ரூபாய் வரையிலும், காட்டுப்பன்றி கறி கிலோ 400 -- 500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்துள்ளனர்.
வேட்டையில் வன விலங்குகள் சிக்காத போது, தெரு நாய்களை அடித்துக் கொன்று, மான் கறி எனக்கூறி விற்பனை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக இப்படி நாய்க்கறியை, மான்கறி என விற்பனை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.