/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
உள்ளாட்சியில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் உற்சாகம்
/
உள்ளாட்சியில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் உற்சாகம்
ADDED : செப் 03, 2011 12:34 AM
பெரம்பலூர்: நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விருப்ப மனு பெறுதல் நேற்று முதல் துவங்கியது.
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே அ.தி.மு.க., முகாம் அலுவலகத்தில் அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு அளித்தல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எம்.பி., இளவரசன் மனு அளித்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஒன்றியம், நகரம் வாரியாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தனித்தனி கவுண்டர்களில் பணம் செலுத்தி விருப்ப மனுவினை அ.தி.மு.க.,வினர் பெற்றுக்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது: பெரம்பலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுவுடன் பத்தாயிரம் ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2,000 ரூபாயும், டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் 2,500 ரூபாயும், டவுன் பஞ்., கவுன்சிலர் பதவிக்கு ரூ.500ம், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 5,000 ரூபாயும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். வரும் 8ம் தேதி இரவு 7 மணி வரை விண்ணப்பங்கள் பெற்று அளிக்கலாம் என்றார்.